யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் இடம்பெற்ற பகிடிவதையைத் தொடர்ந்து உருவான பதற்றமான சூழ்நிலையை அடுத்து தொழிநுட்ப பீடத்தின் அனைத்து மாணவர்களும் வளாகத்தினுள் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுமுக மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக புதுமுக மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறித்துள்ளனர்.
இதனையடுத்து விடுதிக் காப்பாளர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முனைந்த போது, சிரேஷ்ட மாணவி ஒருவர் தகாத வார்த்தைகளினால் உப விடுதிக் காப்பாளரை திட்டியதுடன், சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த தொலைபேசியைப் பறித்துச் சென்றதுடன், விடுதியினுள் கலகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்த போது, பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் விரிவுரைகளுக்கெதிராக சிரேஷ்ட மாணவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் சகல மாணவர்களும் உள் நுழையா வண்ணம் துணைவேந்தரினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதைக்கெதிரான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரையும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையும் மாணவர்கள் மீதான உள்நுழைவுத் தடை நீக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது