காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு,தமது கோரிக்கை இடங்கிய மகஜரை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ளனர்.
மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதையச்சந்திரா தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மனித புதை குiழி அகழ்வுப் பணிகள் இடம் பெறும் பகுதியை சென்றடைந்தது.
அகழ்வு பணிகள் இடம் பெறும் பகுதிக்கு முன் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பினர். அதனைத்தொடர்ந்து குறித்த ஊர்வலம் மன்னார் காவல் நிலைய வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.
பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கின்ற இச் சூழலில் மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டாம், இலங்கை அரசாங்கத்தை நீதிப்பொறிமுறையில் இருந்து தப்ப வைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திராவினால் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலம் குரூஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.