ஒசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களைத் வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. தனது தந்தை கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைப் பழி வாங்க வேண்டுமென, ஹம்சா காணொளி மற்றும் ஒலி வடிவச் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில் அல்-கய்தா அமைப்பின் முக்கியத் தலைவராக ஹம்சா உருவாகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சுமார் 30 வயதாகும் ஹம்சா பின் லேடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவால் சர்வதேசத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டிருந்தார்.
அவர் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பிரதேசத்தில் இருக்கலாம் என தாம் கருதுவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா அவர் ஈரானுக்குள் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது. அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.