தேசிய வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்டம் தோறும் அமுல் படுத்தப்பட்டு வரும் மாதிரிக்கிராமம் மற்றும் கொத்தணிக் கிராமங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (1) காலை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் மாதிரிக் கிராமம் மற்றும் கொத்தணிக் கிராமங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
பிரதேசச் செயலகங்களினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட பயணாளிகளுக்கே குறித்த வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
அதற்கமைவாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பத்திமா கிராமத்தில் 45 வீடுகளும், ஜிம்றோன் நகர் வலயம் 01 இல் 50 வீடுகளும், ஜிம்றோன் நகர் வலயம் 02 இல் 50 வீடுகளும், ஜிம்றோன் நகர் வலயம் 03 இல் 45 வீடுகளும் , ஜிம்றோன் நகர் வலயம் 04 இல் 45 வீடுகளும், கீரி வள்ளுவர் வீதி கிராமத்தில் 15 வீடுகளும், கீரி விவேகனாந்தர் வீதி கிராமத்தில் 22 வீடுகளும், சின்னக்கடையில் 15 வீடுகளும், மூர்வீதியில் 16 வீடுகளும், தாழ்வுபாட்டில் 12 வீடுகளும், தோட்ட வெளியில் 25 வீடுகளும், அம்பாள்புரத்தில் 37 வீடுகளும் மொத்தமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 377 வீடுகள் அமைக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீடுகளுக்கான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் பங்குத்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகீர்,மன்னார் நகர சபை உறுப்பினர்கள்,மன்னார் பிரதேசச் செயலகத்தின் திட்டமிடல் அதிகாரி,கிராம அலுவலகர், மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நானாட்டன் மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் 139 வீடுகளும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 100 வீடுகளும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.