ஒரே பார்வையில், டக்ளஸ் தேவானந்தாவின் குமுறல்கள்…
வடக்கில் பௌத்த மாநாட்டை வடமாகாண ஆளுநர் நடத்த உள்ளதாக கூறியமை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என ஈழமக்கள் ஜனநாய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஊடகவியளாலர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கில் பௌத்த மயமாக்கப்படுவதாக தொடர்ந்து குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கில் பௌத்த மாநாடு நடத்துவது தேவையற்ற விடயம் அது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடு என தெரிவித்தார்.
சொத்து விபர அறிவிப்பு – முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த பம்மாத்து….
கடந்த வருட இறுதியில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற போது கோடிக்கணக்கான பணம் கைமாறப்பட்டதாக எழுந்த குற்றசாட்டுக்களின் அடிப்படையிலையே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு வெளியிட கோரப்பட்டது. அதனை வெளியிட்ட சில உறுப்பினர்களின் சொத்து விபரத்தை பார்க்கும் போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் உள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். அதே போல தேர்தல் திணைக்களத்திற்கும் சமர்ப்பித்துள்ளோம்.
அவ்வாறான நிலையில், இப்ப சிலர் தமது சொத்து விபரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் விபரத்தை பார்க்கும் போது , முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தமை அப்பட்டமாக தெரிகிறது. அதொரு பம்மாத்து வேலை.
எனது சொத்தாக ஶ்ரீதர் தியட்டர் கட்டடமும், கஸ்தூரியார் வீதி கட்டடமும் இல்லை. அதனை எனது சொத்தாக நினைக்காதீர்கள். எனது சொத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும், தேர்தல் திணைக்களத்திலும் ஒப்படைத்துள்ளேன்.
எனது சொத்து விபரத்தை பார்க்க விரும்புவோர்கள். அவர்களிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். என தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுவோம் என அதிகாரத்தில் அமர்ந்த எவரும், பிரச்சனைகளை தீர்க்கவில்லை…
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுவோம் என்றே இன்று ஆட்சி புரிபவர்கள் கூறி ஆட்சிக்கு வந்தார்கள் . ஆனால் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், அதே போன்றே இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என கூறுபவர்களும் இது வரை எதுவும் செய்யவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை காணி விடுவிப்பு காணாமால் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகள் கிடைக்கும் என்றே மக்கள் நம்பி வாக்களித்தார்கள். ஆனால் மக்கள் தொடர்ந்தும் வீதிகளில் போராடாடிக்கொண்டே இருக்கின்றார்கள்.
இதே போன்றே மாகாண சபையில் தாம் ஆட்சி அமைத்தால் அதை பெற்றுக்கொள்வோம், இதை பெற்றுக்கொள்வோம் என கூறி வந்தார்கள். இன்று அவர்களே வடமாகாண சபை ஐந்து வருடத்தை வீணாக்கி விட்டார்கள் எனவும் தமது அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டார்கள் என
எங்களை பொறுத்தவரையில் எவர் மத்தியில் ஆட்சி புரிந்தாலும் , தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ அதனை பெற்றுக்கொடுக்க முனைவோம். புதிய அரசியலமைப்பு தொடர்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆளும் கட்சிகளின் சந்திப்பில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சந்திப்பு நடந்துள்ளது.
யாழ்ப்பாணம் இராணுவத்தினர் கைகளுக்கு வந்த போது , மக்கள் மீள்குடியேறிய போது நாமும் யாழ்ப்பாணம் வந்தோம். அதன் போது யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரச்சனைகள் இருந்த போது , முதல் முதல் நாமே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தை உருவாக்கினோம். பின்னர் அது வேறு ஆட்களின் கைகளில் போயுள்ளது.
மற்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் போல வெளிநாட்டில் இருந்தோ , கிரிக்கெட் பார்த்துட்டு வரவில்லை. எனது தங்கையே போராட்டத்தில் மரணத்த முதல் பெண் போராளி , எனது தம்பி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். அத்துடன் என்னுடன் நெருக்கமாக இருந்த பலர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். அதன் வலிகளை உணர்ந்தவன் நான். இதற்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் , பிரச்சனைகளை தீர்க்க விரும்பவில்லை. அதனாலையே நான் அவர்களில் இருந்து வேறுபடுகின்றேன்.
இனி வரும் தேர்தலில் அவ்வாறன தலைமைகளுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என எதிர்பார்க்கிறேன். நிலைமாறு கால நீதியை பெற முதலில் உண்மைகளை கண்டறியப்பட வேண்டும். அதனால் யுத்ததிற்கு காரணம் என்ன என்பதனை 1983 ஆம் ஆண்டில் இருந்து ஆராயப்பட வேண்டும்.
சம்பந்தன் நேற்று சொல்லுகிறார் பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்றால் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டி வரும் என , பிரச்சனைகளுக்கு தீர்வு வந்து விட்டது என ஆயுதங்கள் கீழே வைக்கப்படவில்லை. வலோத்காரமாக ஆயுதங்களை ஏந்தினோம். வலோத்காரம் காரணமாகவே ஆயுதங்களையும் கீழே வைத்தோம்.
இனப்பிரச்சனைக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வை பெற்று இருக்க முடியும். ஆனால் பெறப்படவில்லை. நீங்கள் ஏன் தீர்க்கவில்லை என என்னிடம் கேட்கலாம். விரலுக்கு ஏற்றதே வீக்கம் எமது கட்சிக்கு ஒரு ஆசனமே கிடைத்தது. மற்றைய தமிழ் கட்சிகளுக்கு 16 ஆசனங்கள் கிடைத்தன. ஆனாலும் நாம் தனித்து போட்டியிட்டே ஒரு ஆசனத்தை பெற்றோம். அவர்களால் அவ்வாறு தனித்து போட்டியிட முடியாதவர்களாக உள்ளனர்.
அதேவேளை அண்மையில் கிளிநொச்சியில் நடந்த போராட்டத்தில் மக்கள். எழுச்சி கொண்டதை பொறுக்க முடியாது , அதனை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
OMP ய அரசாங்கம் சரியாக செயற்படுத்தவில்லை என அரசாங்கத்தை குறை கூறுவதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த அரசாங்கத்தை கொண்டு வந்தோம் என கூறுபவர்கள் அதனை செயற்படுத்த அழுத்தம் கொடுத்திருக்கனும். என தெரிவித்தார்.
மரண தண்டனைக்கு எதிரானவன்..
மரணத்தின் ஊடாக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை எமது கட்சி தீவிரமாக நம்புகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது , போதை பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மரண தண்டனை விதிப்பதன் ஊடாக குற்றங்களை கட்டுப்பாடுத்த முடியாது. மரணங்களின் ஊடாக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனை நாம் தீவிரமாக நம்புகிறோம் என தெரிவித்தார்.