அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு பாடசாலைக்கட்டடங்கள் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இன்று முற்பகல் (01) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.
யாழ் / பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாணவர்களுக்கான ஆரம்ப கற்றல்வள நிலைய கட்டடத்தொகுதி மற்றும் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட அதிபர் விடுதி, சிற்றுண்டிச்சாலை என்பன ஆளுநரால் திறந்துவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,
கல்வியினால் மட்டும் அடையாளம் காணப்பட்ட சமூகம் நாங்கள். உடைந்துபோயுள்ள நம் தேசத்தின் கல்வி தற்போது விழுந்துபோயுள்ளது. அதனை நாங்கள் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல மீண்டும் நம் இலக்கை அடைய நாம் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட்டு செயற்படவேண்டும். ஏனெனில் எமது எதிர்காலத்தின் நம்பிக்கையான இந்த மாணவ சந்ததியினரை நாட்டின் சிறந்த பிரஜைகளாக சரியான வழிகாட்டலின் மூலம் கல்விப்பாதையில் பயணித்தால் மட்டுமே நாம் முன்னேறலாம். எனவே இந்த வடமாகாணத்தின் ஒட்டுமொத்த கல்வியையும் நாம் அனைவரும் பாகுபாடின்றி ஒன்றிணைந்தால் முன்னேற்ற முடியும் என்று வடமாகாண ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று சர்வதேச பாகுபாடுகள் ஒழிப்பு தினமாகும். இந்த கல்வியை அதிகாரத்திற்கு பயன்படுத்தாது நாம் சேவைக்காக பயன்படுத்தவேண்டும். சேவையின்போது பாகுபாடு இல்லாது கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதன் மூலம் வடமாகாணத்தினை முதலிடத்திற்கு கொண்டுவருவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் உள்ளிட்ட பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.