ஒரு நாட்டின் சுகாதாரத் துறையின் வளர்ச்சியை, வைத்தியசாலைகளின் தரத்தை நிருணயிப்பதில் அங்கு மேற்கொள்ளப்படும் இருதய சத்திர சிகிச்சைகளே பிரதான பங்கு வகிக்கின்றன. ஒரு வைத்தியசாலையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுமாயின் அந்த வைத்தியசாலையின் தரம் உயர்ந்த நிலையில் உள்ளதாகக் கருதப்படும்.
யாழ்ப்பாணத்துக்கு 4 நாள் பயணமாக கனடாவிலிருந்து இருதய சத்திர சிகிச்சை நிபுணர், பேராசிரியர் வைத்தியர் றொபேட் ஜேம்ஸ் குசிமனோ இந்த வாரம் வருகை தந்தார்.
இவர், இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி முகுந்தன் குழுவினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட திறந்த இருதய சத்திர சிகிச்சையை – இருதய முடியுரு நாடிகளில் ஏற்படும் அடைப்புக்களுக்கான இருதய மாற்றுவழி சத்திர சிகிச்சையை சத்திர சிகிச்சைக் கூடத்திலிருந்து நேரடியாக அவதானித்தார்.
இருதய சத்திர சிகிச்சை தீவிர கண்காணிப்புப் பிரிவு, இருதய சிகிச்சை விடுதி, இருதய கதிரியக்க ஆய்வு கூடம் ஆகியவற்றுக்கும் சென்று அவதானித்தார்.
பேராசிரியர் குசிமனோ அவர்கள் 27.02.2019 அன்று யாழ்பாண மருத்துவச் சங்கம் ஒழுங்கு செய்த கருத்தரங்கில் வைத்தியர்கள், மருத்துவ மாணவர்களுக்கு உலகளவில் இருதய சத்திர சிகிச்சையில் ஏற்பட்டுவரும் அபிவிருத்தி, இருதயத்தில் ஏற்படும் கட்டிகளுக்கான நவீன அறுவைச் சிகிச்சை தொடர்பில் விரிவுரை ஆற்றியிருந்தார். இவ் விரிவுரையின் நிறைவில் யாழ்ப்பாணத்தில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைகளைச் செய்து வருகின்ற இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி முகுந்தன் மேற்கொள்ளும் சத்திர சிகிச்சையானது உலகின் முதல் தரமான இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் கனடாவின் ரொரான்டோ பொது வைத்தியசாலையில் செய்யப்படுகின்ற சத்திர சிகிச்சைகளுக்கு இணையானது என்றும் வைத்திய நிபுணர் முகுந்தன் வடபகுதியில் வசிக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர் என்றும் பாராட்டியிருந்தார். அத்துடன் கனடா நாட்டு நாணயம் பொறிக்கப்பட்ட பதக்கம் ஒன்றையும் முகுந்தனுக்கு வழங்கிக் கௌரவித்தார்.
இருதய சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் றொபேட் ஜேம்ஸ் குசிமனோ உலகின் பலபாகங்களுக்கும் சென்று இருதய சத்திர சிகிச்சையில் ஏற்பட்டுவரும் அபிவிருத்தி, இருதயத்தில் ஏற்படும் கட்டிகளுக்கான நவீன அறுவைச் சிகிச்சைகள் தொடர்பில் பயிற்சிகளையும் விரிவுரைகளையும் வழங்கி வருவதுடன் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படும் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைகளை அவதானித்தும் வருகின்றார்.
வைத்தியர் றொபேட் ஜேம்ஸ் குசிமனோ அவர்கள் உலகின் முதல் தரமான வைத்தியசாலைகளில் ஒன்றாக விளங்கும் ரொரான்டோ பொது வைத்தியசாலையின் பீற்றர் முங்க் இருதய சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளராகவும் ரொரான்டோ பல்கலைக்கழகத்தின் சத்திர சிகிச்சைப் பிரிவின் இணைப் பேராசிரியராகவும் விளங்குகின்றார்.
இவர் 2006 இல் சீனாவின் சிங்சியாங் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (Xinxiang Medical University in China) அழைப்பின் பேரில் சீனாவுக்குச் சென்று இருதய சத்திர சிகிச்சைப் பயிற்சிகளை மருத்துவர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கினார். சீனாவில் இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட சீனரல்லாத முதல் வெளிநாட்டு வைத்திய நிபுணர் (the first non-Chinese Physician) றொபேட் ஜேம்ஸ் குசிமனோ ஆவர். 2006 இல் இவர் மேற்கொண்ட இருதய சத்திர சிகிச்சை படிமுறைகளை 100 மில்லியன் சீனர்கள் தொலைக்காட்சி மூலமாக நேரடியாகப் பார்வையிட்டனர்.
இருதய சத்திர சிகிச்சை நிபுணர் குசிமனோவின் சேவையைக் கௌரவித்து சிங்சியாங் மருத்துவப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியது.
ஜேம்ஸ் குசிமனோ அவர்களது யாழ்ப்பாணம் வருகைக்கு அனைத்துலக மருத்துக்குழுவின் கனடா நாட்டுக் (IMHO Canada) கிளை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 20.12.2017 இல் முதற்றடவையாக வைத்திய நிபுணர் முகுந்தன் தலைமையிலான குழுவினர் திறந்த இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர். இருதய சத்திர சகிச்சை நிபுணர் முகுந்தன் இதுவரை 100 இற்கும் அதிகமான இருதய சத்திர சிகிச்சைகளை மிகக் குறைந்த வளங்களைக் கொண்டு, நிறைவேற்றியுள்ளார். யாழ். போதனாவில் 1000 இற்கும் அதிகமானவர்கள் இருதய சத்திர சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றார்கள்.