முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட, காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம், கொழும்பைச் சென்றடைந்துள்ளது. நான்கு நாட்களாக பயணித்த இந்த ஊர்வலம்,– காலை 10.00 மணியளவில் கொழும்பு புகையிரத நிலையத்தை சென்றடைந்தது.
அதன் பின்னர் அங்கு பாரிய போராட்டமொன்றும், கையெழுத்து சேகரிப்பும் இடம்பெறுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, கொழும்பில் பல்வேறு தரப்பினருக்கும் மகஜர் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்கக் கோரி, குறித்த மக்கள் ஊர்வலத்தை கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பித்திருந்தனர். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் இந்த மக்கள் ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பமான மக்கள் ஊர்வலம், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன், அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து இம்மக்கள் ஊர்வலம், கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. அதனைத்தொடர்ந்து மன்னாருக்குச் சென்ற குறித்த ஊர்வலம், நேற்று வவுனியாவிற்குச் சென்று அங்கிருந்து புத்தளம், நீர்கொழும்பு ஊடாக கொழும்பை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.