ஈழத்தின் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேச்சரர் ஆலயத்தில் நேற்று முந்தினம் உடைக்கப்பட்ட சிவலிங்கம் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவலிங்கம் அமைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இன்னோரிடத்தில் இச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஆலயத்தின் அன்னதானமடத்திற்கு அருகிலுள்ள சிவலிங்கம் கடந்த வியாழன் இரவன்று உடைக்கப்பட்டுள்ளது. திங்கட் கிழமை சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு ஏதுவாக குறித்த இடத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
ஆலயத்திற்கு வருகை தந்த இனந்தெரியாத விசமிகள் குறித்த சிவலிங்கத்தை உடைத்திருந்த செயற்பாடு திருகோணமலை வைச மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து மீண்டும் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்யும் முயற்சிகள் நேற்று ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்வதற்கு அங்கு வந்து தங்கியுள்ள பெரும்பான்மையின வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் அன்னதான மடத்திற்கு அருகில் சிவலிங்கம் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.
சைவ சமய நம்பிக்கையின் பிரகாரம் சைவக் கடவுளர் ஒருவரை பிரதிஸ்டை செய்துவிட்டு, அதனை உடைத்தாலோ, வேறு இடத்திற்கு அகற்றினாலோ, அவருக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் என நம்பப்படுகின்றது. தற்போது கோணேச்சரர் ஆலயத்தில் பதற்றம் தணிந்துள்ளது.
எனினும் குறித்த சிலையை அகற்றுவதற்கு பெரும்பான்மையின வர்த்தகர்களும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் சிலரும் முயல்வதாக ஆலய சைவ பக்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.