இன்று 02-03-2019 சனி காலை 10:30 மணி அளவில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ’எங்கே முகிலன்? தமிழக அரசே, பதில் சொல்’ என்ற முழக்கத்தோடு சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. . இவ்வார்ப்பாட்டத்திற்கு தோழர் ஆர். நல்லக்கண்ணு தலைமையேற்றார். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முரளி ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார்.
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சி.பி.ஐ.(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், சி.பி.ஐ. யின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எஸ்.டி.பி.ஐ. யின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் கரீம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசு, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கென்னடி, மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர் மருது, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த சீராளன், மக்கள் பாதை அமைப்பின் தலைவர் நாகல்சாமி , த.மு.எ.க.ச. வின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிலையச் செயலாளர் அப்துல் ரசாக், அறப்போர் இயக்கத்தின் பொறுப்பாளர் சந்திரமோகன், தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் பொழிலன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, NCHRO வின் தேசிய தலைவர் அ.மார்க்ஸ், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலத் தலைவர் கண. குறிஞ்சி, இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, சுய ஆட்சி இந்தியா கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் கிறிஸ்டினா சாமி, வெல்பேர் பார்டி ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் அப்துல் ரகுமான், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப் பேரரசு கட்சியின் அமைப்பாளர் இயக்குநர் வ.கெளதமன், இயக்குநர் ராஜூமுருகன், ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளர் ஸ்டெல்லா மேரி, தமிழ்நாடு மாணவர் – இளைஞர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் லயோலா மணி, பூவுலகின் நண்பர்கள் தமிழ்நாடு – பாண்டிச்சேரி அமைப்பின் ஆர்.ஆர். சீனிவாசன், மனிதி அமைப்பின் மேரி மார்டினா, தீக்கதிர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் குமரேசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். மேலும் சூழலியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை அமைப்புகள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என சுமார் 300 பேருக்கும் மேல் இவ்வார்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர். முகிலனின் மனைவி தோழர் பூங்கொடி இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். கட்சி, இயக்க கொடி அடையாளங்கள் இன்றி இவ்வார்ப்பாட்டத்தில் எல்லா அமைப்புகளும் கலந்துகொண்டன.
முகிலன் தனிநபரல்ல, மக்களுக்காக உழைத்ததால் மக்களின் அன்பைப் பெற்ற சமூக அரசியல் செயற்பாட்டாளர் என்பதை தமிழக முதல்வருக்கு நினைவூட்டுகிறோம். தோழர் முகிலன் மட்டுமல்ல எந்தவொரு குடிமகனின் உயிருக்கும் தமிழக அரசே பொறுப்பு. முகிலனின் நிலை என்ன? என்று கண்டறிவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டக் கூடாது. விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும். வருகின்ற மார்ச் 4 அன்று ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. அதற்குள் தமிழக அரசு தோழர் முகிலனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இவ்வார்ப்பாட்டதின் வழியாக வலியுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி இக்காலக்கெடுவுக்குள் தோழர் முகிலன் மீட்கப்படாவிட்டால் வரும் மார்ச் 7 ஆம் நாள் அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் அல்லது மனித சங்கிலி நடத்துவோம் என்று தலைமையுரையில் தோழர் ஆர்.நல்லக்கண்ணு அறிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் கானா நாகராசன் முகிலன் காணாமல்போனது பற்றிய கானா பாடலைப் பாடினார். மதியம் 2 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.