இலங்கை இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்புலவு பூர்விக கிராம மக்கள் ஆரம்பித்த தொடர் நில மீட்புப் போராட்டம் கடந்த மார்ச்1ஆம் திகதியுடன் இரண்டு வருடங்களை பூர்த்தியடைந்துள்ளது. இதனை முன்னிட்டு கேப்பாபுலவு பூர்விக கிராம மக்களின் தொடர் போராட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டமும், அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இராணுவத்தினர் வசம் இருந்த 68 பேருக்கு சொந்தமான 111 ஏக்கர் நிலங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று படையினரால் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏனைய மக்களின் நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படாது அங்கே பாரிய படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டு படையினர் நிலைகொண்டுள்ளனர்.
முல்லைத்தீவின் பிரதான பாதுகாப்பு படைத் தலைமையகம் இந்த மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் படைத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கடந்த வருடத்தின் இறுதி வரை போராடி வந்த மக்கள் இந்த வருடத்தின் ஆரம்ப நாள் முதல் கேப்பாபுலவு படைத் தலைமையகம் முன்பாக விடுவிக்கப்பட்ட மக்களின் காணியில் அமர்ந்து தொடர்ந்தும் போராடி வருகின்றனர்
இன்னும் 104 பேருக்கு சொந்தமான 170 ஏக்கர் நிலங்கள் படையினர் வசமுள்ள நிலையில் 56 குடும்பங்களுக்குச் சொந்தமான 59 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்கள் பிரதேச செயலகத்தில் இருப்பதனால் இந்த 56 பேருக்கு சொந்தமான காணியை முதற்கட்டமாக படையினர் விடுவிக்க வேண்டும் என தெரிவித்து மக்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முல்லைத்தீவில் இந்த மக்களை சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த மக்களில் மூன்று பிரிவினராக போராடி வருவதாகவும் பலர் மாற்று காணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சிலர் இழப்பீடு கோரி உள்ளதாகவும் சிலர் சொந்த காணிகள் கேட்டு போராடுவதாகவும் தெரிவித்து இந்த மக்களை ஒரு முடிவுக்கு வருமாறும் சொந்த நிலம் வேண்டுமா அல்லது வேறு ஏதும் தேவைகள் வேண்டுமா எனக் கேட்டு ஒரு முடிவுக்கு வருமாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கேப்பாபிலவு மக்கள் இங்கே யாரும் வேறு எந்தக் கோரிக்கையையும் முன் வைக்கவில்லை எனவும் ஆளுநர் தமது போராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் இவ்வாறு கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் தாம் தமது சொந்த நிலங்களை கோரி தொடர்ந்து போராடி வருவதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் இந்த அரசாங்கம் தமது சொந்த நிலங்களை மட்டும் தந்தால் தாம் நிம்மதியாக தமது சொந்த நிலங்களுக்கு செல்ல ஆவலோடு காத்திருப்பதாகவும் 54 குடும்பங்களின் பிரச்சினையைத் தீர்க்கக் கூடியவர் என்ற வல்லமை உள்ள இந்த ஆளுநர் விரைந்து தமது காணிகளை தமது மீட்டுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.