சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கை கிரிக்கெட்டிற்கு மீள வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகம் அமைந்துள்ள துபாயில் இன்று இடம்பெற்ற சிறப்பு சந்திப்பின்போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.
நாட்டில் நிலவிய அரசியல் ஸ்திரமற்ற நிலைமையினால் கிரிக்கெட்டிற்கான தேர்தலை உரிய வகையில் நடத்துவதற்கான இயலுமை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு காணப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு நிதி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டிருந்த நிiயிலேயே இவ்வாறு நிதியுதவி வழங்குவதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடுகள் இன்றி, இலங்கை கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட்டின் புதிய நிர்வாக குழு, சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது