யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இரானுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளன.
படையினர் வசமிரந்த காணிகளை விடுவிக்கும் நிகழ்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற போது யாழ் மாவட்ட இரானுவத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி, தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட NI 251, 253, 246 ஆகிய கிராம சேவகர் பிரிவிலுள்ள விடுவிக்கப்பட்ட காணிக்கான பத்திரத்தை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகத்திடம் கையளித்தார்.
இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் காணி உரிமையாளர்கள், இரானுவத்தினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நீண்ட காலமாக படையினர் ஆக்கிரமிப்பில் இருந்த குறித்த காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கமைய படிப்படியாக காணிகளும் விடுவிக்கப்பட்டு வந்தன. இந் நிலையிலையே இன்றையதினம் மேலும் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.