இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை – பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்ளும் மாணவன்

யாழ்.பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகமோ , கோப்பாய் காவல்துறையினரோ உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் ஒருவன் தனது பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவனான ப. சுஜீவன் எனும் மாணவன் கடந்த மாதம் 7ஆம் திகதி பல்கலைகழகத்தினுள் வைத்து பகிடிவதை என 4ஆம் வருட சிரேஸ்ட மாணவர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்திலும் , பல்கலைகழக நிர்வாகத்தினரிடமும் மாணவன் முறைப்பாடு செய்திருந்தார். ஆனாலும் முறைப்பாடு செய்யப்பட்டு ஒரு மாத காலம் ஆகின்ற போதிலும் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவில்லை.
அந்நிலையில் கடந்த வாரம் குறித்த மாணவனின் முகநூல் போன்று போலி முகநூல் கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டு , அந்த கணக்கில் இருந்து பெண்களுடன் அவதூறாக, பாலியல் ரீதியாக பேசுவது (சட்டிங்) போலான முகநூல் பிரதிகளை (ஸ்கிரீன் சொட்) எடுத்து,  சிரேஸ்ட மாணவர்கள் தமது முகநூலில் பகிர்ந்து “இவ்வாறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவனையே சிரேஸ்ட மாணவர்கள் தண்டித்தார்கள்” என பதிவிட்டார்கள்.
அதனால் குறித்த மாணவன் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு , பல்கலைகழகம் செல்வதற்கு பயந்து வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த மாணவனை அவரது சகோதரன் பல்கலைகழகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
பல்கலைகழகத்தினுள் வைத்து மாணவனின் சகோதரனை அவதூறாக பேசி சகோதரனை பல்கலைகழகத்தை விட்டு வெளியேற்றி விட்டு மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த மாணவன் பல்கலைகழக நிர்வாகத்திடம் சரணடைந்துள்ளான்.
பின்னர் பல்கலைகழக மாணவர்களின் ஒழுக்காற்றுக்கு சம்பந்தமான விரிவுரையாளரும் , பல்கலைகழக மாணவ ஒன்றிய தலைவரும் மாணவனை பொறுப்பெடுத்து , பல்கலைகழக வளாகத்தினை விட்டு வெளியே அழைத்து வந்து விட்டுள்ளனர். அதன் போதும் மூன்றாம் வருட மாணவன் ஒருவன் “இவனை எல்லாம் ஏன் பல்கலைகழகத்தினுள் எடுத்தீர்கள் அடித்து துரத்துங்கள் ” என மாணவர் ஒன்றிய தலைவருக்கு முன்பாக வைத்தே மாணவனை மிரட்டியுள்ளார்.
குறித்த சம்பவங்களால் மாணவனின் பெற்றோர்கள் தமது பிள்ளைக்கு ஆபத்து வந்துவிடுமோ எனும் பயத்தில் உறைந்துள்ளனர். அந்நிலையில் மாணவனும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனும் காரணத்தால் தனது பட்டப்படிப்பை இடை நிறுத்திக்கொள்ள தீர்மானித்து உள்ளதாக தெரிவித்தார்.
கிளிநொச்சி வளாகத்திலும் பகிடிவதை. 
அதேவேளை கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வாளகத்தில் கற்கும் பளையை சேர்ந்த மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக தற்கொலைக்கு முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பற்றப்பட்டார். அந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் திகதி கிளிநொச்சி வாளகத்தில் சிரேஸ்ட மாணவிகள் பகிடிவதையில் ஈடுபட்டதுடன் அதனை தடுக்க முயன்ற விடுதி காப்பாளரை தர குறைவாக பேசி , அவரது தொலைபேசியையும் பறித்து சென்றனர்.  அந்த குழப்ப நிலையினால் தொழிநுட்ப பீடம் துணைவேந்தரின் அறிவுருத்தலுக்கு அமைய மூடப்பட்டது.
புதுமுக மாணவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு சென்றும் பகிடிவதை. 
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலை கழகத்தில் கல்வி கற்கும் புதுமுக மாணவர்கள் கொக்குவில் பொற்பதி பகுதியில் வாடகை அறையில் தங்கியுள்ளனர். அங்கு கலட்டி பகுதியில் தங்கியுள்ள சிரேஸ்ட மாணவர்கள் சென்று புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தி அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அதன் வலி தாங்க முடியாத மாணவர்கள் கத்தி அழுததை கேட்டு வீட்டு உரிமையாளர் அங்கு சென்ற போது அங்கிருந்த சிரேஸ்ட மாணவர்கள் ” பல்கலைகழக மாணவர்கள் விடயம் இதில் நீங்கள் தலையிட கூடாது” என மிரட்டியுள்ளனர். அதன் போது வீட்டு உரிமையாளர் தான் இது தொடர்பில் காவல்துறையினரிடம் முறையிடுவேன் என கூறியதும், சிரேஸ்ட மாணவர்கள் அங்கிருந்து சென்றனர்.
பகிடிவதை என சித்திரவதை செய்தமை தொடர்பில் காவல்துறையினரிடம் முறையிடுமாறு புதுமுக மாணவர்களை வீட்டு உரிமையாளர் கோரிய போதும் ” எங்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. தாம் பழிவாங்களுக்கே ஆளாக வேண்டி வரும் எனவே இதனை பெரிது படுத்தாமல் கல்வியை தொடர்வதே தமக்கு உள்ள வழி” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல கஷ்டங்கள் இன்னல்களுக்கு மத்தியில் கல்வியை தொடர வரும் மாணவர்களை பகிடிவதை எனும் பெயரில் சித்திரவதைக்கு சிரேஸ்ட மாணவர்கள் உள்ளாக்குவதனால் புதுமுக மாணவர்கள் உளரீதியாகவும் , உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவை தொடர்பில் பல்கலைகழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பலரும் கோரி வருகின்றனர். ஆனாலும் பல்கலை கழக நிர்வாகம் தொடர்ந்து மௌனமாக இருந்தே வருகின்றது.
 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.