பிரித்தானிய விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜெனீவாவிற்கு செல்லவிருந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் under the Terrorism Act 2000 திற்கு அமைவாக ஹீத்ரோ விமான நிலையத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரித்தானியாவின் பறை இசைக் குழுவைச் சேர்ந்த கலைஞரான 36 வயதான வாகீசன் தங்கவேல் என்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இருவரே கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினை காவற்துறையினர் பறிமுதல் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 6.20 மணிக்கான விமானத்தில் பறக்க இருந்த இவர்களைக் கைது செய்த காவற்துறையினர் சில மணித்தியாலங்கள் விசாரணையை முன்னெடுத்ததாகவும், விசாரணையைத் தொடர்ந்து முற்பகல் 11 மணியளவில் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், மாலை 5 மணிக்கு வாகீசனின் வீட்டை சுற்றி வளைத்த பயங்கரவாத எதிர்ப்புக் காவற்துறையினர் சோதனைகளை மேற்கொண்ட வேளை அவரின் மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் நிலையில், பேரவைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடுவதற்கு சென்ற போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.