தமிழின் பெருமைகளைத் தமிழர்கள் உணரவில்லையென்றால், அடுத்த தலைமுறைக்குத் தமிழைச் சிறப்பாக எடுத்துச் செல்ல முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கொன்றில் மதுரையில் உலக தமிழ்ச் சங்கம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் மதுரை உலக தமிழ்ச் சங்கச் சிறப்பு அலுவலர் கே.எம்.சேகர் தாக்கல் செய்த பதில் மனுவில் உலக தமிழ்ச் சங்கத்தில் ஏசி கூட்ட அரங்கு, நூலகம், ஆராய்ச்சி அரங்கு அமைக்க அரசு 12 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழ்ச் சங்க மேம்பாட்டுக்குத் தமிழக அரசு தேவையான நிதியுதவிகளைச் செய்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், தமிழின் பெருமைகளைத் தமிழர்கள் உணரவில்லையென்றால், அடுத்த தலைமுறைக்குத் தமிழைச் சிறப்பாக எடுத்துச் செல்ல முடியாது என்று கூறினர்.
தமிழை வளர்க்க வெளிநாடுகளில் எடுக்கப்படும் முயற்சிகள்கூட, தமிழகத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை. பிற மாநிலங்களில் தமிழ்வழிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன என்று வேதனை தெரிவித்தனர்.
இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பாடக்குறிப்புகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறதா என்றும் நீதிபதிகள கேள்வி எழுப்பினர்.
தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழ் வளர்ச்சிக்காகத் தினமும் பத்து நிமிடங்கள் ஒதுக்கினால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்த நீதிபதிகள் அனைத்துத் தமிழ் அலைவரிசைகளையும் இவ்வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து மனுத் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டதுடன் , இந்த வழக்கு விசாரணை வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.