முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 28 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் பல மாதங்களாகியும் ஆளுநர் இதுதொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.
மக்களவைத் தேர்தலுக்காக பாஜக – அதிமுக – பாமக ஆகியவை கூட்டணி அமைத்துள்ள நிலையில், கூட்டணிக்கு ராமதாஸ் விதித்த 10 நிபந்தனைகளில் எழுவர் விடுதலையும் ஒன்றாகும். இந்தநிலையிலலேயே அதிமுக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நேற்று சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் நடந்த நிலையில் பிரதமர் மோடியிடம் ராமதாஸ் நேரடியாக வலியுறுத்தியுள்ளார்