கிளிநொச்சி இரணைமடுக்குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 2 ஆயிரத்து 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட போதும் அதன் புனரமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குளத்திலுள்ள நீர் அதிகளவில் வெளியேறி வீண் விரயமாகி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்
வடமாகணத்தில் அதி முக்கியத்துவம்பெறும் குளமாக கருப்படுகின்ற இரணைமடுக்குளம் கடந்த 2015ஆம் ஆண்டு மீள் புனரமைக்கப்பட்டு 34 அடியாக காணப்பட்ட குளம் தற்போது 36 அடியாக உயர்த்தப்பட்டது.
இவ்வாறு பெருந்தொகை நிதியில் புனரமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதியால் விவசாயிகளிடம் கையளிக்கப்பட்ட இக்குளத்தின் புனரமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக நாளாந்தம் பெருமளவான நீர் வெளியேறி வருகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இரணைமடுக்குளத்திலிருந்து உருத்திரபுரம் முரசுமோட்டை ஊரியான் போன்ற பகுதிகளுக்கான நீர் விநியோக வாய்க்காலின் பிரதான கதவு உரிய முறையில் புனரமைக்கப்படாமையினால் இவ்வாறு நீர்வெளியேறி வருகின்றது எனவும் இவ்வாறு வெளியேறும் நீரினால் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கிளிநொச்சிக்குளம் நிரம்பி வான் பாயும் அளவுக்கு காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதைவிட, முரசுமோட்டை பன்னங்கண்டி போன்ற பகுதிகளில் வயல் நிலங்களில் அதிகளவான நீர் வீண் விரயமாகிக் காணப்படுகின்றன எனவும் இது தொடர்பில் உரிய தரப்பினரிடம் முறையிட்டும் அவர்கள் பதில் வழங்க மறுத்துள்ளனர் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.