இலங்கையில் பிரபாகரன்கள் உருவாக மதிப்பிற்குரைிய சிங்கள மக்களே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.
தாம் சிறுவயதில் தமது தந்தையுடன் பொலனறுவையில் இருந்து புகையிரத்தில் கொழும்பு சென்றபோது தமிழ் மக்களுக்கு சிங்கள மக்கள் இழைத்த அநீதிகளை பல தடவைகள் உணர்ந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். இதுவே பிரபாகரன்கள் உருவாக காரணம் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ரயில் பயணம் தொடர்பில் தனக்கு அனுபவம் உண்டு. பொலனறுவையில் இருந்து கொழும்பிற்கு 7, 8 மணித்தியாலங்கள் பயணிக்கும் தபால் ரயில் சேவை உள்ளது. அந்த ரயில் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும்.
தனது பெற்றோர், அப்போது சிறுவர்களாக இருந்த தம்மை அழைத்துக்கொண்டு பொலனறுவை ரயில்வே நிலையத்திற்கு செல்வார்கள். அப்போது கொழும்பிற்கு பயணிப்பதற்காக சுமார் 400, 500 பேர் ரயில் நிலையத்தில் குவிந்திருப்பார்கள். அந்த ரயில் மட்டக்களப்பிலிருந்து புறப்படும்.
மட்டக்களிப்பிலிருந்து புறப்படும் ரயிலில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் நிறைந்திருப்பார்கள். பொலனறுவையில் ரயிலில் ஏறும்போது தமக்கு ஆசனங்கள் இருக்காது. அப்போது சிங்கள மக்கள் என்ன செய்தார்கள்? ஆசனங்களில் சிறு குழந்தைகளுடன் உறக்கத்தில் இருக்கும் தமிழ் மக்களை அடித்து துரத்திவிட்டு அந்த இருக்கைகளில் சிங்கள மக்கள் அமர்ந்துகொள்வார்கள். இதனை தான் ஒருநாளோ, இரண்டு நாட்களோ பார்க்கவில்லை. பல தடவைகள் கண்டுள்ளதாக குறிப்பிட்டள்ளார்.
அப்போது பயத்தில் ‘ஐயோ சாமி’ என கத்திக்கொண்டு, அழுதுகொண்டு மலசலகூடங்களிலும் மறைவான இடங்களிலும் சிறு குழந்தைகளுடன் தமிழ் மக்கள் ஒளிந்துகொள்வார்கள். மதிப்பிற்குரிய சிங்கள மக்கள் அந்த ஆசனங்களில் அமர்ந்துகொண்டு உறங்குவார்கள். இவ்வாறுதான் பிரபாகரன்கள் உருவானார்கள்” எனத் தெரிவித்தார். இதனை தேசிய நல்லிணக்கம் தொடர்பாக அனைவரும் கதைக்கும் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புவதாக கூறியுள்ளார்.