அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்குமாறு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர் குழுவையும் நியமித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் குறித்த நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினருமாக 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து பின்னர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என கேள்வி உச்ச நீதிமன்றம் எழுப்பிய போது அதற்கு நிர்மோகி அகாரா தவிர்த்த பிற இந்து அமைப்புகள் எதிர்த்த போதும் முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன.
அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் கருத்துக்களை கேட்டபின், மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பான உத்தரவை திகதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில், அயோத்தி நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் பேசித் தீர்க்கும்படி உத்தரவிட்டதுடன் அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.கல்புல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை நியமித்தனர்.
இந்தக் குழு, அயோத்தி நிலப்பிரச்சனை தொடர்பாக ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து 8 வாரங்களில் முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பேச்சுவார்த்தை பைசாபாத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற வேண்டும் எனவும் பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் ; தெரிவித்துள்ளனர்.