சென் ஜோன்ஸ் கல்லூரி இந்தப் போட்டியில் நிர்ணயித்திருந்த 232 என்ற ஓட்ட இலக்கை நோக்கிய மத்திய கல்லூரி அணி, அணித் தலைவர் மதுசனின் அதிரடியான துடுப்பாட்டத்துடன் வெற்றியிலக்கை நோக்கிய போதும், ஆட்டநேர முடிவில் 176 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
இந்தப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியின் பணிப்பின் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்த நிலையில், யாழ். மத்திய கல்லூரி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன் பின்னர் 14 ஓட்டங்கள் முன்னிலையுடன் களமிறங்கிய சென் ஜோன்ஸ் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட்டிழப்பின்றி 121 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன்படி இன்றைய தினம் களமிறங்கிய சென் ஜோன்ஸ் அணி மீண்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய தினம் 46 ஓட்டங்களுடன் களத்தில் நின்ற, சௌமியன் இன்றைய தினம் தனது அரைச்சதத்தை பூர்த்திசெய்தார். எனினும் நீண்ட நேரம் அவரால் தாக்குபிடிக்க முடியாத நிலையில், மதுசனின் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து, சென் ஜோன்ஸ் கல்லூரியின் முதல் இன்னிங்ஸில் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்த வினோஜன், வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் களத்திலிருந்து வெளியெறியதுடன், சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் கடந்திருந்த தனுஜன் 66 ஓட்டங்களுடன் மதுசனின் பந்து வீச்சில் சாரங்கனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
சாதனை இணைப்பாட்டத்தை கடந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் களத்திலிருந்து வெளியேற்றப்பட, மத்திய கல்லூரி அணி தங்களுடைய சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்த ஆரம்பித்தது. இதன் அடிப்படையில், சென் ஜோன்ஸ் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான எல்சன் டெனுசன் (5), மற்றும் ஹேமதுசன் (3) ஆகியோரின் விக்கெட்டுகளை வியாஸ்காந் மற்றும் மதுசன் ஆகியோர் கைப்பற்ற, சென் ஜோன்ஸ் கல்லூரி அணி மதிய போசன இடைவேளையின் போது, 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றிருந்தது.
தொடர்ந்து மதிய போசன இடைவேளைக்கு பின்னர், அணித் தலைவர் மேர்பின் அபினாஷ் மற்றும் முதல் இன்னிங்ஸில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டினோஷனுடன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி ஆட்டத்தை ஆரம்பித்தது. துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் மத்திய கல்லூரி அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைத்திருந்தது.
குறிப்பாக சென் ஜோன்ஸ் அணியின் தலைவர் மேர்பின் அபினாஷ் 14 ஓட்டங்களுடனும், புதிய துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரதுசன் ஆகியோர் கவனயீனமாக ஓட்டங்களை பெற முற்பட்ட நிலையில், ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்ட டினோஷனும் 22 ஓட்டங்களை பெற்று, வியாஸ்காந்தின் பந்தில் சாரங்கனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
விக்கெட்டுகள் ஒரு பக்கம் அடுத்தடுத்து சரிக்கப்பட்ட நிலையில், 9வது விக்கெட்டுக்காக இணைந்த சபேஷன் மற்றும் அபினேஷ் ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு சற்று வலுசேர்த்தனர். எனினும் துரதிஷ்டவசமாக 14 ஓட்டங்களை பெற்றிருந்த சபேஷன், வியாஸ்காந்தின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். எனினும் இறுதி துடுப்பாட்ட வீரர் சரணுடன் (4) துடுப்பெடுத்தாடிய எண்டன் அபிஷேக் 31 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்த நிலையில் சென் ஜோன்ஸ் கல்லூரி தங்களுடைய ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
தேநீர் இடைவேளையுடன் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்ட சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 88 ஓவர்களுக்கு முகங்கொடுத்து 9 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்றதுடன், மத்திய கல்லூரி அணிக்கு 232 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. மத்திய கல்லூரி அணியின் பந்து வீச்சில் வியாஸ்காந்த 88 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அணி தலைவர் மதுசன் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.
பின்னர் 232 என்ற வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய யாழ் மத்திய கல்லூரி அணி, சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான இயலரசன் மற்றும் சாரங்கன் ஆகியோர் நிதானமாக ஓட்டங்களை குவித்து வந்தனர். எனினும், துரதிஷ்டவசமாக சாரங்கன் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 27 ஓட்டங்களை பெற்றிருந்த இயலரசன் சரணின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இந்துஜன் மற்றும் ஜெயதர்சன் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதும், துரதிஷ்டவசமாக 28 பந்துகளுக்கு 7 ஓட்டங்களை பெற்றிருந்த ஜெயதர்சன் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த மத்திய கல்லூரி அணிக்கு, தலைவர் மதுசன் தன்னுடைய அதிரடியான துடுப்பாட்டத்தின் ஊடாக வலுவழித்தார்.
மதுசனுடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய இந்துஜன் நிதானமாக ஒரு பக்கம் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, மதுசனுக்கு அதிக நேரங்களுக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொடுத்தார். இதன்படி மதுசன் வேகமாக ஓட்டங்களை குவிக்க, மத்திய கல்லூரி அணி 100 ஓட்டங்களை கடந்தது. மறுபக்கம் இருந்த இந்துஜன் வேகமாக ஓட்டங்களை பெற முற்பட, டினோஷனின் பந்து வீச்சில் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இவரது ஆட்டமிழப்பின் பின்னர் வியாஸ்காந்துடன் இணைந்து மதுசன் வேகமாக ஓட்டங்களை குவித்ததுடன், வெறும் 27 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். மதுசன் வேகமாக ஓட்டங்களை பெற மறுமுனையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய வியாஸ்காந் மற்றும் ராஜ்கிலிண்டன் அடுத்தடுத்து வெளியேறினர்.
இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்தும் தனது அதிரடியை வெளிப்படுத்திய மதுசன் ஆட்டநேரத்தின் இறுதி ஓவரில் அதிரடியாக துடுப்பெடுத்தாட முற்பட்ட நிலையில், அபினேஷின் பந்து வீச்சில் துஷானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மதுசன் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களை குவித்தார்.
எவ்வாறாயினும், மதுசனின் விக்கெட் வீழ்த்தப்பட்ட அதே ஓவரில் ஆட்டநேர முடிவின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, போட்டி சமனிலையில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, யாழ். மத்திய கல்லூரி அணி 40 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றிருந்தது. பந்து வீச்சில் அபிஷேக் மற்றும் அபினேஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் அடிப்படையில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த 113வது வடக்கின் பெரும் சமர் இன்று சமனிலையை எட்டியுள்ளது. குறிப்பாக இரண்டு அணிகளும் சிறந்த திறமைகளையும், சம பலமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தன. அதேநேரம், 113வது வடக்கின் பெரும் சமரின் இந்த சமனிலையானது 41வது சமனிலை போட்டியாக அமைந்துள்ளது. அத்துடன், ஒட்டுமொத்தமாக சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 36 வெற்றிகளையும், மத்திய கல்லூரி 28 வெற்றிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
சிறந்த விக்கெட் காப்பாளர் – கமலபாலன் சபேசன் (யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி)
சிறந்த துடுப்பாட்ட வீரர் – தெய்வேந்திரம் டினோஷன் (யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி)
சிறந்த பந்து வீச்சாளர் – விஜயகாந் வியாஸ்காந் (யாழ். மத்திய கல்லூரி)
சிறந்த களத்தடுப்பாளர் – தியாகராஜா வினோஜன் (யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி)
ஆட்ட நாயகன் – விஜயகாந் வியாஸ்காந் (யாழ். மத்திய கல்லூரி)
சிறந்த சகலதுறை வீரர் – கமலராசா இயலரசன் (யாழ். மத்திய கல்லூரி)
படங்கள் – ஐ.சிவசாந்தன்