எதியோப்பியாவில் போயிங் விமான விபத்தில் ஐநா ஆலோசகர் உள்ளிட்ட 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மற்றும் எதியோப்பிய அதிகாரபூர்வ தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
எத்தியோப்பிய அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் நேற்று (10.03.19) காலை 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது. வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதனால் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
பின்னர் நடந்த தேடுதலில், தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் 149 பயணிகள், விமானிகள் உள்ளிட்ட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் பெயர்களை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது ருவிட்டரில் வெளியிட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த வைத்திய பன்னகேஷ் பாஸ்கர், வைத்திய ஹன்சின் அன்னகேஷ், நுகவரபு மனிஷா, ஷிகா கார்க் ஆகியோர் விமான விபத்தில் மரணம் அடைந்திருப்பதாக எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தனக்கு தகவல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இறந்தவர்களில் ஷிகா கார்க், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆலோசகர் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதி செய்துள்ளார். ஷிகா கார்க், நைரோபியில் நடைபெறும் ஐநா கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தான் கூறி உள்ளதாகவும் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.