முற்றுகை நிலையிலிருக்கும் அரசாங்கமொன்றை முன்னைய ஜெனீவா தீர்மானத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு அதீதமாக நெருக்குதலுக்கு உள்ளாக்க முடியாது என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் அடுத்தவாரம் இலங்கை விவகாரம் ஆராய்விற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது இலங்கை சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதிகளாக செல்லும் மூவர் குழுவும், வெளியுறவு அமைச்சின் சார்பில் கலந்துகொள்பவர்களும் கடந்த 2015 ஒக்டோபர் தீர்மானம் தொடர்பில் இருவேறு நிலைப்பாடுகளை முன்வைக்கவுள்ளனர்.
அதனால் இலங்கை மீதான சர்வதேச நெருக்குதல்கள் குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையிடமிருந்து இருவேறுபட்ட நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் இலங்கை அரசாங்கம் ஒரு முற்றுகைக்கு உள்ளாகிய நிலையில் இருக்கின்றது என்ற எண்ணம் சர்வதேச சமூகத்திற்கு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தகைய முற்றுகை நிலையிலிருக்கும் அரசாங்கமொன்றை முன்னைய ஜெனீவா தீர்மானத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு அதீதமாக நெருக்குதலுக்கு உள்ளாக்க முடியாது என்றே சர்வதேச சமூகம் முடிவிற்கு வருமென நம்பலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.