முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட கைதுசெய்யப்படுவதனை தடுக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பினை அண்மித்த பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைதுசெய்வதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் மற்றும் நீதித்துறையினர் மீது தனது அதிகாரத்தை பயன்படுத்தினார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் ஜனாதிபதி, சொலிசிட்டர் ஜெனரல் டபுல டி லிவெர, வசந்த கரனாகொடவிற்கெதிராக குற்றப்பத்திரம் தாக்கப்படவுள்ளமை உட்பட அனைத்து விபரங்களையும் தெளிவுபடுத்தினார் என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது. இதன் போது தான் நீதிக்கு குறுக்கே நிற்கப்போவதில்லை என ஜனாதிபதி சொலிசிட்டர் ஜெனரலிடம் தெரிவித்துள்ளார் எனவும் கொழும்பு டெலிகிராவ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பின்னர் மார்ச் ஆறாம் திகதி வசந்த கரனாகொட சார்பில் இலங்கையின் பிரபல வர்த்தகர்களான டிரான் அலஸ் மற்றும் டிலித் ஜெயவீர ஆகியேர் ஜனாதிபதியை சந்தித்தனர் எனவும் இதன் போது அவர்கள் வசந்த கரனாகொடவை கைதுசெய்வதற்கு அனுமதிக்கவேண்டாம் என மன்றாடியுள்ளனர் எனவும் இவர்கள் இருவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் எனவும் கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது
வசந்த கரனாகொட கைதுசெய்யப்பட்டால் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பாரதூரதன்மை காரணமாக அவருக்கு பிணைகிடைக்காது என இருவரும் சுட்டிக்காட்டியதனையடுத்து இது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துடன் பேசுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. இவர்களை சந்தித்த பின்னர் சட்டமா அதிபரை தொடர்புகொண்ட ஜனாதிபதி வசந்தகரனாகொடவை கைதுசெய்யுமாறு வற்புறுத்தவேண்டாம் என தெரிவித்துள்ளார் எனவும் கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.