ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிற் நடவடிக்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் 2-வது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.
பிரெக்ஸிற் நடவடிக்கை தொடர்பில் தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்துள்ளதுடன் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினர்.
எனினும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த நிலையில் ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிற் தொடர்பாக மார்ச் 12ம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இதன் மூலம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரெக்ஸிற்றின் காலக்கெடு இந்த மாதம் 29ம் திகதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.