இந்தியாவின் தென்மாநிலங்களில் வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும், கறுப்புப் பணப் புழக்கத்தைக் கண்காணிக்கவும் தலைமைத் தேர்தல் ஆணையகம் உயர்மட்டக் குழுவொன்றை அமைத்துள்ளது
மக்களவைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன.
அத்துடன் பல இடங்களில் பணம் பிடிக்கப்படுகின்ற நிலையில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படலாம் என்ற எண்ணத்தில் அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையகம், தேர்தல் புலனாய்வுப் பல்துறைக் குழு என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் மத்திய நேரடி, மறைமுக வரிகள் ஆணைய உயரதிகாரிகள், வருவாய் புலனாய்வுத் துறை, பொருளாதாரப் புலனாய்வுத் துறை, நிதித் துறை புலனாய்வு உயரதிகாரிகள், உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் நேரங்களில் எங்கு பணம் புழக்கம் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறதோ, அங்கு கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் இக்குழு ஈடுபடும். வங்கிகளில் தொடங்கி பணம் நடமாட்டம் இருக்கும் ஒவ்வோர் இடத்திலும் கண்காணிப்பு நடைபெறும். கடந்த மூன்று மாதங்களில் வங்கிகளில் மிகப்பெரிய பண முதலீடுகள், பணம் எடுத்தல் ஆகியவை குறித்து சிரேஸ்ட வங்கி அதிகாரிகள் தகவல்களைச் சேகரித்து வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் அதிக அளவு பணம் புழங்குவதைக் கண்டறிந்துள்ளதாகவும், இந்த மாநிலங்களில் கண்காணிப்பு மிக அதிகளவில் இருக்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.