அண்மையில் எத்தியோப்பியாவிலும், ஐந்து மாதங்கள் முன்பு இந்தோனசியாவிலும் நடுவானிலிருந்து நொருங்கி விழுந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை உலகம் முழுவதிலும் நிறுத்திவைப்பதாக இந்த விமானங்களைத் தயாரித்த அமெரிக்க நிறுவனமான போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில் உலகம் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் இந்த ரகத்தைச் சேர்ந்த 371 விமானங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன.
எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேரும், இந்தோனசிய விமான விபத்தில் 189 பேரும் உயிரிழந்திருந்தனர்.
எத்தியோப்பிய விபத்தைத் தொடர்ந்து ஏற்கெனவே இந்தியா, பிரித்தானியா , சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த விமானத்துக்கு தடை விதித்திருந்த போதும் இந்த விமானத்தில் குறைபாடு இருப்பதாக காட்டுவதற்கு ஆதாரம் இல்லை எனத் தெரிவித்து அமெரிக்கா மட்டும் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து வந்தது.
இந்நிலையில், எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்றை விசாரணையாளர்கள் கண்டுபிடித்ததையடுத்து இந்த விமானங்களை நிறுத்த அமெரிக்காவும் முடிவெடுத்த நிலையில் குறித்த ரக விமானங்களை இயக்குவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக அமெரிக்காவின் பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.