குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் 17 வயதுடைய மாணவர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வைத்து குறித்த மாணவர்கள் மூவரும் நேற்றுக் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மூவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருப்பவர்கள் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலினடிப்படையில் அங்கு இரகசிய சுற்றுக்காவலில் காவல்துறையினர்; ஈடுபட்டிருந்த போது, சுமார் 100 மில்லிக்கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அதனை நுகரத் தயாராகிய போதே கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்
சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முற்படுத்தப்பட்டனர். ‘சந்தேகநபர்கள் மூவரும் மாணவர்கள். அவர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக்க் காத்திருக்கின்றனர்’ அவர்களின் சட்டத்தரணி மன்றுரைத்தார். வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.