தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாகச் செயல்படும் மணல் குவாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் விவசாயப் பாசனத்துக்கு ஆதாரமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் குவாரிகள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாகவும் இது குறித்து முறைப்பாடு செய்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நேற்றையதினம் இடம்பெற்ற நிலையில் தாமிரபரணி ஆற்றில் எந்த குவாரிக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டுள்ள போதும் மீண்டும் எவ்வாறு குவாரிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் செயல்படும் மணல் குவாரிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆற்று மணல் கடத்தப்படுவதைத் தடுக்க, சவுடு மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கவும் தடை விதித்துள்ளனர்