குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச தரத்திலான அனைத்து வசதிகளை கொண்ட விளையாட்டு மைதானமாக 2011 ஆண்டு யூலை மாதம் 20 திகதி ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் நீச்சல் மற்றும் உள்ளக விளையாட்டு அரங்குகள் இன்று(17) திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை வலைபந்தாட்ட அணியின் வீராங்கனை தர்சினி சிவலிங்கம் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு இவற்றை பயன்பாட்டிற்காக கையளித்து வைத்துள்ளார்.
உதைபந்து, கிரிக்கெட், தடகள விளையாட்டுகள், நீச்சல், உள்ளக விளையாட்டரங்கு உள்ளிட்ட பலவற்றை கொண்டமைந்த விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறாது நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த நிலையில் நீச்சல் மற்றும் உள்ளக விளையாட்டரங்குகளின் பணிகள் மாத்திரம் நிறைவுற்ற நிலையில் அவை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது
ஏனயைவற்றின் பணிகள் மேற்கொள்ளப்படாது காணப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் மீண்டும் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தொலைதொடர்பு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாடோ, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அடிக்ல் நாட்டி வைத்தனர்.
20.07.2011 அன்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் கடந்த எட்டு வருடங்களில் நீச்சல் மற்றும் உள்ளக விளையாட்டரங்குகள் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் விளையாட்டு அமைச்சின் செயலாளர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், வீர வீராங்கனைகள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.