குளோபல் தமிழ்ச் செய்திகள்
சர்வதேச தரத்திலான கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் இவ்வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தொலைதொடர்பு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாடோ வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம்(17) விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் பயிற்சி தடாகம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கம் என்பவற்றை திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவாதம் கிளிநொச்சி விளையாட்டு மைதானம் தொடர்பில் நான்காவது உத்தரவாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் போதும் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஒரு சில வருடங்களுக்கு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் நிறைவுறும் எனத் தெரிவித்திருந்த போதும் அவ்வாறு அபிவிருத்திப்பணிகள் இடம்பெறவில்லை.
இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015 தேசிய விளையாட்டு போட்டிகள் யாழ் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெறும் அதற்கு முன்னதாக மைதானம் புனரமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதுவும் நடைபெறவில்லை
இந்த நிலையில் 2015 ஆம்ஆண்ட ஒக்ரோபர் மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த தயாகமகேயினால் ஒரு வருடத்திற்குள் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திகள் நிறைவுக்கு கொண்டுவரப்படும் எனவும் 2015 தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இது இடம்பெறவில்லை எனவே 2016 இல் அது இடம்பெறும் என அறிவித்திருந்தார் ஆனால் அதுவும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் நேற்று(17) கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் 2019 க்குள் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என உறுதியளித்திருக்கிறார்.
அத்தோடு 500 மில்லியன் ரூபா செலவில் கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி உதைபந்து, கிரிக்கெட், தடகள விளையாட்டுகள், பயிற்சி நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டரங்கு உள்ளிட்ட பலவற்றை கொண்டமைந்த விளையாட்டு மைதானத்திற்கே அடிக்கல் நாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.