பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்து கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 96 திரைப்படத்திற்கு தெலுங்கில் விருது கிடைத்துள்ளது. விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பல விருதுகளையும் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
சமந்தா, சர்வானந்த் நடிக்க ‘96’ தெலுங்கு மறுஉருவாக்க வேலைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும், இயக்குநருமான மாருதி ராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாகக் கொடுக்கப்படும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் பெறவுள்ளார்.
1992இல் தனது முதல் படமான ‘பிரமேபுஸ்தகம்‘ என்னும் படத்தை இயக்கும்போது ஸ்ரீனிவாசன் காலமானார். அதைத் தொடர்ந்து அப்படத்தை மாருதி ராவ் இயக்கி முடித்தார். ஸ்ரீநிவாஸ் நினைவாக நடத்தப்படும் ‘கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ விழா கடந்த 21 வருடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2001ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் 96 என்பது குறிப்பிடத்தக்கது.