தூத்துக்குடி இரசாயன தொழிற்சாலை ஒன்றின் பயன்பாட்டுக்காகத் தாமிரபரணி ஆற்றிலிருந்து சட்ட விரோதமாகத் தண்ணீர் எடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையாளரை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நியமித்துள்ளது
தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் , தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உள்ள தா.ரங்கதாரா ரசாயன தொழிற்சாலை,
தாமிரபரணி ஆற்றிலிருந்து சட்ட விரோதமாகத் தண்ணீரை எடுத்து தொழிற்சாலைக்குப் பயன்படுத்தி வருகிறது எனவும் அரசின் அனுமதியின்றி பல ஆண்டுகளாக ராட்சத மின் மோட்டார் நீரேற்று நிலையம் அமைத்து தாமிரபரணி ஆற்று நீரை 24 மணி நேரமும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்
இதனால், நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் பஞ்சமும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளதனால் தொழிற்சாலை ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதைத் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் தொழிற்சாலைக் கழிவுகள் ஆறு மற்றும் கடலில் கலக்கப்படுகிறதா, சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதா, முறையான அனுமதியுடன் உரிமம் பெற்று ஆலை இயங்குகிறதா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரளர் ஒருவரை நீதிபதிகள் நியமித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஆணையாளர் ஆய்வறிக்கை தாக்கல் செய்யவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.