குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருவிட்டான் கிராம மக்கள் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக குடி நீர் வசதி இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், குறித்த பிரச்சினை தொடர்பில் நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட வில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமத்ததைச் சேர்ந்த சுமார் 25 குடும்பங்கள் வரை இவ்வாறு பாதிப்பை எதிர் நொக்கி வருகின்றனர்.
எருவிட்டான் கிராமத்தில் உள்ள நீர்த்தாங்கி பழுதடைந்த நிலையில், காணப்படுவதோடு, நீர் குழாய்களும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.மேலும் குறித்த தாங்கிக்காண மின் மோட்டர் பழுதடைந்து பல மாதங்களாகின்றது.
இதனால் குடி நீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அக்கிராம மக்கள் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தற்போதைய கால நிலை மாற்றத்திற்கு அமைய கடும் வெப்ப நிலை நிலவுகின்றதனால் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் போதிய நீர் வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது குறித்த கிராமத்தில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு தொற்று நோயும் எற்படும் நிலை காணப்படுகின்றது.எனவே குறித்த பிரச்சினை தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் பிரச்சினை தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதியை வினவிய போது,,,,,,
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வட்டாரங்களினூடாக முடி நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏற்கனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக கடுமையாக நீர் பாதிப்புக்குள்ளான கிராமங்கள் பல வற்றிற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடாக நீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கிராமத்தின் நீர் பிரச்சினை தொடர்பாக கடந்த இரு நாட்களுக்கு முன் எழுத்து மூலம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.ஆனால் இன்று வரை அக்கிராமத்தைச் சேர்ந்த எவரும் வந்து கதைக்கவில்லை.
குறித்த கிராமத்திற்கு அவசர நிலையை கருத்தில் கொண்டு குடி நீரை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.என அர் மேலும் தெரிவித்தார்.