குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 2 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தைச் செலுத்தவேண்டும் என உத்தரவிட்ட மன்று, அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியது.
கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் சரை ஒன்றை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை கோப்பாய் காவல்துறையினர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தினர்.
சந்தேகநபர் தன்மீதான குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டு குற்றவாளி என மன்றுரைத்ததனையடுத்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.
அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் தீர்ப்பளித்தார்.
அத்துடன், குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை செலுத்தவேண்டு என்று உத்தரவிட்ட நீதிமன்று, அதனை செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியது.
கோப்பாய் காவல்துளை பிரிவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 19 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது வழக்கு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனையடுத்து நீதிமன்று தண்டனைத் தீர்ப்பை வழங்கியது