கர்நாடக மாநிலம் தார்வாரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளதுடன் இடிபாடுகளுக்குள் 12 மாணவிகள் உயிருடன் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தார்வார் டவுனில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட தனியார் வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென்று இடிந்து விழுந்திருந்தது.
திடீரென்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், கடைகளில் பணியாற்றியவர்கள் மற்றும் கணிணி பயிற்சி மையத்திற்கு வந்த மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
சம்பவம் இடம்பெற்ற நாளில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 60-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டிருந்தனர். தொடர்ந்து மீட்புபணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று வரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் கட்டிடத்திற்குள் யாரும் உயிரோடு இருக்கிறார்களா என நவீன இயந்திரங்கள் மூலம் சோதனை மேற்கொண்டதில் ஒரு பெரிய தூணுக்கு அடியில் பலர் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் கணிணி பயிற்சி மையத்திற்கு வந்த 12 மாணவிகளாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடம் 3 மாடிகளை கட்டிக் கொள்ள மட்டுமே அனுமதி பெற்று விட்டு அனுமதியை மீறி சட்டவிரோதமாக 5 மாடிகளை கட்டி உள்ளனர் எனவும் அந்த கட்டிடத்தை தாங்கும் அளவிற்கு வலுவாக தூண்கள் அமைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது