வடகொரியா தென்கொரியாவிற்டையிலான பேச்சுவார்த்தைக்கு உதவும் முகமாக கடந்த ஆண்டு திறக்கப்பட்ட தொடர்பு அலுவலகத்தில் இருந்து வட கொரியாவின் பிரதிநிதிகள் வெளியேறியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டு வடகொரியாவின் ஊழியர்கள் இன்று அலுவலகத்தை விட்டு சென்றுவிடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள தென்கொரியா இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளதுடன் வெளியேறிய வடகொரிய ஊழியர்கள் விரைவில் திரும்பி வர வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
கடந்த மாதம் வியட்நாமில் நடைபெற்ற அமெரிக்க, வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான உச்சி மாநாடு தோல்வியடைந்ததை தொடர்ந்தே வட கொரியா இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவின் எல்லையில் அமைந்துள்ள கெசொங் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த தொடர்பு அலுவலகம், கொரிய போருக்கு பின்னர் முதல் முறையாக வடகொரிய மற்றும் தென்கொரிய அதிகாரிகள் அடிக்கடி தொடர்பு கொள்ள ஏதுவாக இருந்ததாகவும் அங்கு இரு தரப்பிலிருந்தும் தலா 20 பேர் ஊழியர்களாக இருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு இந்த அலுவலகம் திறக்கப்பட்டபோது, இரு கொரியாக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
அண்மையில் விதிக்கப்பட்ட தடைகளை அகற்றியது அமெரிக்கா…
வடகொரியா மீது அமெரிக்கா விதித்த அண்மைய தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள தாம் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கும் தடைகளுடன் கூடுதலாக விதிக்கப்படும் பெரிய அளவிலான தடைகள் விலக்கப்படும் என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியா மீதான தடைகளை மீறி அந்நாட்டுக்கு நிலக்கரியை அனுப்பிய இரு சீன கப்பல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளையே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக கருதப்படுகின்றது. பன்னாட்டு பொருளாதார தடைகளை மீற வடகொரியாவுக்கு அந்த நிறுவனங்கள் உதவுவதாக தெரிவித்திருந்த அமெரிக்க நிர்வாகம் அவற்றின் மீது தடை விதிப்பதாக விடுத்த அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே தென்கொரியா உடனான பேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வடகொரியா தனது அதிகாரிகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது