முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை என இலங்கை சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், யுத்தக் காலத்தில் கோத்தாபய பயனற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் நாட்டில் பல கொலைகளை செய்தார் என்பதற்கான சாட்சிகளும் இருக்கின்ற நிலையில் இவ்வாறான கொலைக் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என தான் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கும் அளவுக்கு நாட்டு மக்களும் முட்டாள்கள் இல்லை எனத் தெரிவித்த விக்கிரமபாகு கருணாரட்ன கோத்தாபயவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களமிறக்கினால், அந்தக் கட்சிக்கு இருக்கும் வாக்குகள் கூட கிடைக்காமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினை இன்னும் நீடித்து வருவதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தக் கூட்டணி தொடர்பாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்