இந்திய மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவருக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, நதிகள் இணைப்பு, விவசாயக் கடன்களுக்கு தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி பிரதமர் மோடி அவற்றில் எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை.
டெல்லியில் இதற்காக 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்திய போது மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தங்களை ஐந்து முறை சந்தித்து வாக்குறுதிகளை வழங்கிய போதும் இதுவரை எதையும் செய்யவில்லை.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்டு ஏப்ரல் 24ஆம் திகதி வாரணாசி செல்லவுள்ளதாகவும், அங்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிச்சையெடுக்கப் போவதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் 25ஆம் திகதியன்று பிரதமர் மோடிக்கு எதிராக அனைத்து விவசாயிகளும் வேட்புமனு தாக்கல் செய்வோம் எனவும் இதன் மூலமாக தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அப்பகுதி மக்களுக்கு காண்பிப்போம் எனவும், தங்களுக்கு அனைத்து மாநில விவசாயிகளின் ஆதரவு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.