ஜெனிவாவில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்தார். கொலன்னாவை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்;.
மேலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்
அரசாங்கத்தின் மீதான பற்று குறைவடைந்துள்ளமையின் காரணமாக அனைத்து தரப்பினரும் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் அதன் ஒரு வெளிப்பாடாக, ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் போட்டித்தன்மையான உறவுநிலை காணப்படுவதாகவும் இவ்வாறான நிலைமைகள் ஒருபோதும் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தாது எனவும் பலவீனமான அரசாங்கம் பலவீனமான ஒரு நாட்டினை உருவாக்கும் நடைமுறையில் இந்நிலைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கின் முன்னேற்றத்திற்காகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்று குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கோத்தாபய குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கிற்கு தேசிய அரசாங்கம் எவ்வித சுய அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் 30வருட கால பயங்கரவாத யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து 13ஆயிரம் விடுதலை புலி போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு அவர்கள் சமூதான வாழ்க்கைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.