Home இலங்கை தொடர்ந்தும் ஏமாற்றப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் – ஹப்லுல்லாஹ் புகாரி

தொடர்ந்தும் ஏமாற்றப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் – ஹப்லுல்லாஹ் புகாரி

by admin


நாட்டில் கடந்த முப்பது வருடகாலமாக தொடர்ந்த யுத்தமானது ஒரு இனத்தின் உரிமைக்கான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், யுத்த முடிவில் அது பல பாதக விளைவுகளையும் ஏற்படுத்தி இருந்தது. இதனை நடுநிலையாக சிந்திக்கும் எவரும் மறுதளிக்க முடியாது. அத்துடன் யுத்தம் முடிந்த பிற்பாடு அந்த யுத்தம் ஏற்படுத்தி சென்ற பாதகமான வடுக்கல் இன்று வரை தொடர்வது கவலையளிக்கின்றது. அந்தவரிசையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, வெள்ளைக்கொடி விவகாரம், இராணுவ அத்துமீறல்கள், காணி அபகரிப்புகள், மனித உரிமையை மீறும் இராணுவத்தின் செயற்பாடுகள் எனத் தொடரும் பட்டியலில் இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் எனும் தலைப்பும் ஒன்றாகும்.

இக் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை போராட்டங்கள் மூலமும், அகிம்சையை தழுவிய சாத்வீக நடவடிக்கைகள் மூலமாகவும் மற்றும் சர்வதேசம் தழுவிய அரசியல் அழுத்தங்கள் மூலமாகவும் வலியுறுத்தப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. மிக முக்கியமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சனையாக அடையாளப்படுத்தப்பட்டு தற்காலத்தில் அரசிற்கு பெறும் தலைவலியாகவும் இருந்து வருகின்றது.

இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் எனும் பதம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் எம் செவிகள் அதிகம் கேட்ட வார்த்தைகளில் ஒன்றாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 2009 இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் பல உரிமை சார் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பற்றி த.தே.கூட்டமைப்பும், தமிழ் மக்களும் அழுத்தங்களை பிரயோகித்து வருகிற போதிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சர்ச்சைகளும்,கோஷங்களும் கடந்த காலங்களிலும், சமகாலத்திலும் தொடர்ச்சியாக பல ஊடகங்களையும் ஆட்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இவற்றின் மற்றுமொரு நிகழ்வாகவே கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய நடைபவனி பேரணியை பார்க்க முடிகின்றது. இப்பேரணியானது ஐ.நா வில் இடம்பெறும் நாற்பதாவது கூட்டத்தொடரை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்பட்டதுடன் முக்கியமான சில கோரிக்கைகளையும், நாட்டுக்கு சில செய்திகளையும் முன்வைதது இருந்தது.

அதாவது இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்றும் எங்களுக்கு சர்வதேச விசாரனை மட்டுமே தீர்வாக அமையும் என்றும் அங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருந்ததை, அவர்கள் ஏந்தி இருந்த சுலோகங்கள் உட்பட அங்கு பங்குபற்றிய அத்தனை உறவுகளினதும் உணர்வு வெளிப்பாடுகளிலும் காண கூடியதாக இருந்தது.

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமும் கூட எங்களுக்கு தெரியும் கடந்த காலங்களில் காணமல் ஆக்கப்பட்டோர் என்பதை காட்டிலும் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர் என்ற பதம் உள்ளங்களில் கவலைகளை இரட்டிப்பாக்குவதை உணர முடிகின்றது. காரணம் விசாரணைக்காக என அழைத்து செல்லப்பட்டவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை இது முழு அபத்தமான ஒரு ஈனச் செயலாகும் ஆகவே அவர்களின் போராட்டங்களில் 100% நியாயம் காணவே முடிகின்றது.

அத்துடன் உறவுகளை இழந்தவர்களின் மனோநிலையில் இருந்து குறித்த விவகாரத்தை கையாளும் போதும், அத்துடன் இக்குடும்பங்கள் அனுபவிக்கும் இன்னோரன்ன துன்ப துயரங்களை கண்முன்னே நிறுத்தி அந்த விவகாரத்தை சிந்திக்க முற்படும் போதும் குறித்த விவகாரத்தில் நியாயங்களை தவிர வேறெந்த குறைபாடுகளையும் காண முடியவில்லை. ஆகவே இந்த அரசாங்கம் ஆணைக்குழுக்களை அமைத்து பூச்சாண்டி காட்டும் செயல்களை தவிர்த்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்வை வழங்க முன்வர வேண்டும். அத்தீர்வானது நியாய பூர்வமானதாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் அமையதல் வேண்டும் என்பது பலரினதும் அவாவாகும்.

இங்கு என்னுடைய நோக்கம் இந்த போராட்டத்தை விமர்சனம் செய்வதோ அல்லது இப்போராட்டத்தில் குறை காண்பதோ இல்லை இந்த போராட்டத்தின் பின்னனியில் இருக்கும் சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது இச்சட்டம் ஓரினத்துக்கு மட்டும் வலுவுள்ளதாக அமையுமா? மற்றும் அச்சட்டங்கள் எவ்வாறு ஏனைய மத்ததவர்களுக்கும் வலுவுள்ளதாக மாறும், இதுபோன்ற சில யாதாரத்தபூர்வமான காரணிகளை தெளிவுபடுத்தலாம் என்பதே எனது இச் சிறு கட்டுரையின் நோக்காகும்.

அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு தீர்வுகளை முன்மொழியும் நோக்குடன் முதன் முதலில் அரச அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு தான் மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவாகும். இந்த ஆணைக்குழு ஒரு இழுபரிப்போக்கான கணக்கெடுப்பையும், மந்தமான பணியையும் மேற்கொண்டு வந்ததுடன் இவர்களின் பணி முழுமையாக பூரணப்படுத்தப்படாத நிலையில், 2016 ஆண்டின் முற்பகுதியில் இடைநிறுத்தப்பட்டு, அதே ஆண்டு மே மாதமளவில் காணாமல் போனோர் அலுவலகச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டிருந்தது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் அவர்களால் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டும் இருந்தது.

அதாவது 2016 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கு தீர்வுகளை முன்வைக்கும் முகமாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க “தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளை நிறைவேற்றுதலும்” எனும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஒருவருடம் தாண்டியே சர்வதேச சமூகத்தின் அதிருப்திக்கும், அழுத்தங்களுக்கும் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அழுத்தத்திற்கும் மத்தியில் குறித்த அலுவலகம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கும் வந்தது.

அத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு போர்க்காலத்தில் அதாவது 1983-2009 வரையான யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் ஏறத்தாழ 20,000 பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் மன்னார் ஆயர் ஒரு முறைப்பாட்டில் குடிமக்கள் சார்பாக 140,000 பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்திருந்தார்.

ஆனாலும் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எவ்வாறு தகவல் திரட்டப்பட்டது என்பது பற்றி நாம் அறியவில்லை. எனினும் இங்கு காணாமல் ஆக்கப்பட்டோர் எனும் பதத்தில் பல வகையினரை உள்வாங்க முடிகிறது.. அதாவது புலிகளால் வலிந்து இயக்கங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள்,, இறுதிப்போரில் பங்குபற்றி இறந்தவர்கள், இயற்கை மரணமெய்தியவர்கள், நாட்டை விட்டு தப்பியோடி இயற்கை எய்தியவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பல வகையாக பிரிக்க முடியும். அத்துடன் யுத்தகாலப்பகுதியில் பல வகைகளிலும் மனித உயிர்கள் வேட்டையாடப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும். குறிப்பாக அப்பாவிகள் பலரையும் இந்த தலைப்பின் கீழ் உள்வாங்க முடியாமலும் இல்லை..

அதாவது மேற்கூறிய பாராளுமன்ற அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற சட்டவாக்கங்கள் ஒருபோதும் 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்தில் கொள்ளப்பட்டவர்களுக்காக மாத்திரம் உருவாக்கப்பட்டதொன்றல்ல என்பதை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அறிக்கையிடப்பட்ட கால வரையறையானது ஓரிரு தசாப்தங்களை மையப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு பல தலைப்பின் கீழ், காணாமல் ஆக்கப்பட்டோரை உள்வாங்க முடியும். அந்த வரிசையில்

1. 1989 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற JVP கலவரத்தை அடக்க அரசு மேற் கொண்ட அடக்குமுறைகளின் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் காணமல் ஆக்கப்பட்டிருந்தனர் அந்த கறுப்பு நிகழ்வுகளும் இக்காலப்பகுதியிலே இடம்பெற்றது.

2. இராவணுத்திடம் சரணடைய வந்த விடுதலை புலிகள் உறுப்பினர்கள் பலரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் இவர்களையும் உள்வாங்க முடியும்

3. வலிந்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்களையும் இங்கு உள்ளீரப்புச் செய்ய முடியும்

4. பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட காணமல் ஆக்கப்பட்டிருக்கின்றார் இவரின் வழக்குகளும் இச்சட்டத்தை தழுவியே விசாரிக்கப்படல் வேண்டும். விசாரிக்கவும் படுகின்றது.

5. அக்காலப்பகுதியில் பாசிசப் புலிப் பயங்கரவாதிகளினால் காணாமல் ஆக்கப்பட்ட பல அப்பாவிகளையும் உள்வாங்க முடியாமல் இல்லை. அதாவது தொழிலுக்கு சென்றவர்கள், மாடு மேய்க்க சென்றவர்கள், வயிற்றுப் பிழைப்புக்காய் காடுகளில் விறகுகள் சேகரிக்க சென்றவர்கள், சந்தேகத்தின் பெயரில் கொள்ளப்பட்டவர்கள் மத வெறியில் கொள்ளப்பட்டவர்கள், கப்பம் கோரி கொள்ளப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் என பல முஸ்லிம்கள் புலிகளால் வேட்டையாடப்பட்டு அவர்களின் குடும்பங்களும் நிர்க்கதியாக்கப்பட்ட கசப்பான சம்பவங்களையும் நாம் மறந்து விட வில்லை.

இறுதியாக குறிப்பிடப்பட்ட விடயம் மிக முக்கியமானதும், அத்துடன் பலராலும் பேசப்படாமல் மறைக்கப்பட்டதுமான ஒரு கசப்பான கண்ணீர் காவியமாகும். கடந்த முப்பது வருடகால யுத்தம் நிழவிய காலத்தில் கிழக்கிலும், வடக்கிலும் வாழும் முஸ்லிம்கள், பல இரத்த சரித்திங்களை தன்னகத்தே கொண்டும், இன்னும் பல இன்னோரன்ன வன்செயல்களால் பாதிக்கப்பட்டும் நிர்க்கதியாக்கப்பட்ட பல குடும்பங்களின் அவலங்களையும் தாங்கி நிற்கின்றார்கள்.

எம் கண்ணெதிரில் கூட அவ்வாறான கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றது,அதாவது 2006 ஆம் ஆண்டு மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்செயல்களின் தொடர்ச்சியாக மூதூர் மக்கள் ஊரை விட்டும் வெளியேற்றப்பட்டபோது நடந்தேறிய ஆட்பிடிப்பு நாடகங்களையும் குறிப்பிட முடியும் ஆனாலும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திலோ, குறித்த சட்டமூலகளுக்கு அமைவாக தீர்வுகள் வேண்டும் என்றோ அல்லது சர்வதேச நீதி வேண்டும் என்றோ போராட்டங்களை முன்னெடுக்க வில்லை. இது அவர்களின் விட்டுக்கொடுப்போ அல்லது அவர்களின் அசிரத்தை போக்கோ தெரியவில்லை. ஆனாலும் இது தொடர்பாக கடந்த ஆண்டு 37 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய உண்மையைக்கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு வழங்குதல், மற்றும் மீள்நிகழாமை என்பவற்றுக்கான ஐக்கியநாடுகளின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிரீப் இலங்கையில் அனைத்து சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்டோர் உள்ளனர் என்ற கருத்தை மேற்கோளிட்டு பேசியிருந்தமையானது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் கடந்த வரவு செலவுத்திட்ட அறிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அவர்களின் வழக்குகள் கையேற்கப்பட்டு நீதி வழங்கப்படும் வரை மாதாந்தம் 6000/- கொடுப்பனவு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட அனந்தி சசிதரன் அவர்கள் இது சரியான தீர்வாக அமையாது மாறாக இடைக்கால தீர்வாக ஒருவருக்கு இருபது இலட்சமோ அல்லது ஐம்பது இலட்சமோ வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.

மேற்படி அவர்களின் தூரநோக்கான போராட்டங்கள் மூலமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் பாரிய நிதி நஷ்ட ஈட்டை பெற்றுத்தர கோரி நிற்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. அப்படியாயின் அவ்வாறான பெருந்தொகையான நிதி நஷ்ட ஈடு வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அந்த சட்டமூலத்துக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்ட முஸ்லிம்களின் உறவுகள் ஏன் அதனை இழக்க வேண்டும் என்பது ஒரு யதார்த்தமான ஓர் வினாவாகும்.

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பேசிய அனந்தி சசிதரன் அவர்கள் முஸ்லிம்களின் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததையும் சில கடைகள் திறந்து இருந்த தகவலையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த விடயம் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஓர் விடயமே இங்கு முஸ்லிம்கள் சற்று இன நல்லுறவை பேணும் வகையில் நுட்பமாக சிந்திக்கும். மனப்பாங்கை வளர்த்து கொள்ள வேண்டும். காரணம் தமிழ் பேசும். மக்களாகிய நாம் என்றும் ஒரு நெருங்கிய உறவை பேணி வருகிறவர்கள் ஆகவே எமது சகோதர தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பண்புகளை வளர்த்து கொள்ளல் வேண்டும். இனிவரும் காலங்களிலாவது குறித்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் கரிசனையுடன் செயற்பட வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பேரணியின் போது அங்கு கலந்து கொண்டோரின் உருக்கமான முறையீடுகளும், செவ்விகளும் மனதில் ஈரமுள்ள அனைத்து மனித உள்ளங்களையும் கண் கலங்கவே செய்திருக்கும் . உண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு இனத்திற்கு இழைக்கப்பட பாரிய அநீதியாகவே நோக்க முடிகிறது. இதற்கான தீர்வை முன்வைக்க இலங்கை அரசு சுற்றிவலைப்புகளையும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்களையும் செய்து அந்த மக்களுக்கான தீர்வை தாமதப்படுத்துவதில் எந்த நியாயங்களும் இல்லை என்றே கூற வேண்டும்.

இப்பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கண்ணீர், அவர்கள் அடிப்படை வாழ்வியல் விடயங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை படம் பிடித்தும் காட்டுகின்றது. அத்துடன் அவர்கள் ஏந்தி இருந்த சுலோகங்களை பார்க்கும் போது எமது கண்களும் சிறிது நீர் கசியவே செய்தன. அதாவது “ஜனாதிபதி மாமா எங்கள் அப்பவை மீட்டு தாருங்கள்”, “அரசே எங்கள் மேல் இரங்க மாட்டாயா” போன்ற வார்த்தைகள் கலங்காத உள்ளங்களையும் கலங்கவே செய்தது. இவர்களுக்கான தீர்வு விரைவில் வழங்கப்பட வேண்டும் அத்துடன் அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிவாரணங்களும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும் சர்வதேசமும் அதற்கான அழுத்தங்களை மேற்கொண்டு அம் மக்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இங்கு இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் இப்பேரணி முன்னெடுக்கப்பபட்ட சமகாலத்தில் ஜெனிவாவில் இடம்பெற்ற நாற்பதாவது கூட்டத்தொடரில் இம் மக்களின் போராட்டங்களுக்கு ஒரு பச்சை கொடியும் காட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஹப்லுல்லாஹ் புகாரி
மூதூர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More