நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் ஆளும், எதிர்கட்சி தரப்பினர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர் கட்சிக்குளேயே மஹிந்த மற்றும் கோத்தாபய ராஜபக்ஸ என்ற இரு தரப்பு ஆதரவாளர்களாக முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் அதே வேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான கூட்டணி தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து அமைக்கவுள்ளதாக கூறப்படும் கூட்டணி தொடர்பில் இரண்டு கட்ட உத்தியோக பூர்வ கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளன.
எனினும் கூட்டணி அமைக்கப்பட்டால் அதன் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமிக்கப்பட வேண்டும் என சுதந்திர கட்சி தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நூற்றுக்கு 51 வீத வாக்குகள் பெறப்பட வேண்டும். அந்த பெரும்பாண்மையை கொண்ட ஒரேயொரு கட்சியாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவே காணப்படுகின்றது. இந்த நிலையில் பொது ஜன பெரமுனவிலிருந்து வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதல்ல, பொது ஜன பெரமுனவிலிருந்தே வேட்பாளர் நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகும். எனத் தெரிவித்துள்ளார்.