இவை நேற்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இடம்: ஏழுகோயில் – ஏழாலை அத்தியடிப் பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாகவும் அத்தியடி முருகன் ஆலயத்துக்கு அருகாமையிலும் அமைந்துள்ள பூந்தோட்டக் கிணறு. இவ்விடம் சுன்னாகம் மின்சார நிலைய வீதியில் இருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
தற்போது நாடுமுழுவதும் என்று மில்லாதவாறு வெப்பம் அதிகரித்துள்ளது. நீரூற்றுக்கள் வற்றிப் போகின்ற நிலை காணப்படுகின்றது. கடுங் கோடையான இக்காலப்பகுதியில் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெய் அதிகரித்துள்ளதை இப்படங்கள் தெளிவாகக் காண்பிக்கின்றன.
யாழ் குடாநாட்டில் உள்ள 4 பிரதான நன்னீர்ப் படுக்கைகளில் சுன்னாகம் நன்நீர்ப்படுக்கையே (பெரிய ஒரு கப்பல் கொள்ளத்தக்க அளவு நீர்) இலகுவில் வற்றிப்போகாத கற்பகதருவை ஒத்த நீரைக் கொண்டுள்ளது; இது மாசுபடுத்தப்பட்டுள்ளது. இன்று குடிப்பதுக்கோ கால்நடைகளுக்கோ சுன்னாகம் பிரதேச நீரைப் பயன்படுத்த முடியாதுள்ளது. “எங்களுக்கு வீதி அபிவிருத்தி வேண்டாம் குடிப்பதற்கு நீர் தான் வேண்டும்“ என்ற காரைநகர் பிரதேச மக்கள் கேட்கின்றார்கள். 10 வருடங்களுக்கு முன்னர் காரைநகருக்கு சுன்னாகத்தில் இருந்து நீர் விநியோகம் செய்யப்பட்டது; பின்னர் சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு காரணமாக நிறுத்தப்பட்டது. 1990 களுக்கு முன்னர் மதவாச்சி புகையிரதநிலையம் வரை சுன்னாகத்து நீர் விநியோகம் செய்யப்பட்டது.
ஏழாலையில் பல இடங்களில் நிலத்தடி நீரில் கழிவு ஓயில் பாதிப்புக் காரணமாக மேற்கொள்ளப்பட்ட நீர் விநியோகம் தற்போது ஒழுங்காக நடைபெறுவதில்லை. ஏழாலை தெற்கு தென்னிந்தியத் திருச்சபை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள நீர்த்தாங்கிக்கு பல நாள்களாக நீர் விநியோகிக்கப்படவில்லை. நீர் விநியோகத்தை ஒழுங்காக மேற்கொள்ள இப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி, மக்கள் பிரதிநிதிகள் முதலானோரர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .
மழை வீழ்ச்சி இல்லாததால் நிலமேற்பரப்பு நீர் கிணற்றினுள் சேர்வதுக்கு வாய்ப்புக் குறைவு. தற்போதைய கடும் வறட்சி நீடிக்குமெனில் நிலத்துக்கீழ் ஆழமான பகுதியில் அமைந்துள்ள சுன்னாகம் நீர்ப்படுக்கையில் இருந்தே அதிகளவு நீர் நிலக்கீழ் ஆற்றுப்பாதை வழியாக கிணறுகளை வந்து சேரும். இந்நீர்படுக்கையில் சேர்க்கப்பட்ட கழிவு எண்ணை அகற்றப்படும் வரை நீருடன் கழிவு எண்ணெயும் கலந்து வரும் நிலை தொடரும்.
சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, ஊரெழு முதலான பிரதேசத்தில் உள்ளவர்கள் வீட்டுக் கிணற்று நீரை அவதானித்து விட்டு நீரை அருந்த வேண்டும். எதிர்கால சந்ததியான உங்கள் பிள்ளைகளுக்கு கழிவு ஓயில் பாதிப்புக்குள்ளான நீரை குடிப்பதுக்குக் கொடுக்க வேண்டாம்.
பெரும்பாலனவர்கள் கழிவு ஓயிலால் பாதிக்கப்பட்ட நீரையே அருந்துகிறார்கள். கால்நடைகளுக்கு இந்நீரையே குடிப்பதுக்குக் கொடுக்கின்றார்கள். இந்நீரை குடிக்கின்ற பசுக்களின் பாலைத் தொடர்ச்சியாக அருந்துவதால் எதிர்காலத்தில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஹிங்லே என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் உள்ள மக்கள் நிலத்தடி நீர் இவ்வாறு மாசுபட்டதால் பாரிய சுகாதாரப் பிரச்சினை ஒன்றை நீண்ட காலத்தின் பின்னர் எதிர்கொண்டனர். ஒரு தலைமுறையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டது.
பா.துவாரகன்