ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றை தகர்த்த இந்தியாவின் செயலால் 400 துண்டுகளாக அந்த செயற்கைக்கோள் சிதறிக் கிடக்கிறது எனவும் இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து அதிகரித்துள்ளது எனவும் நாசா கவலை தெரிவித்துள்ளது.
இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், மற்ற எதிரிநாட்டு செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையான மிஷன் சக்தி திட்டத்தினை கடந்த மாதம் 27-ம் திகதி மத்திய பாதுகாப்புதுறையின் டிஆர்டிஓ நடத்தியிருந்தது.
இந்த மிஷன் சக்தி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார். அமெரிக்கா, ரஸ்யா, சீனாவுக்கு அடுத்தாற்போல், இந்தியாவிடம் செயற்கைக்கோள் பாதுகாப்பு ஏவுகணை இருக்கிறது எனவும் சோதனையின் போது, ஒரு செயற்கைக்கோளை 3 நிமிடங்களில் துல்லியமாக ஏவுகணை தாக்கி அழித்தது எனவும் தெரிவித்திருந்தார்
இந்நிலையில், தகர்த்து எறியப்பட்ட செயற்கைக்கோளின் பாகங்கள் 400-க்கும் மேற்பட்டவை விண்வெளியின் புவிசுற்றுவட்டப் பாதையில் மிதப்பதாக ஏற்கனவே அமெரிக்கா கூறி இருந்தநிலையில், இந்தியா தகர்த்த செயற்கைக்கோளின் பாகங்கள் 400 துண்டுகளாக சிதறிக்கிடக்கின்றன எனவும் இவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் நாசா விண்வெளி மையம், தெரிவித்துள்ளது.
ஏவுகணை அழித்த செயற்கைக்கோளின் உடைந்த 400 பாகங்கள் விண்வெளியில் குப்பைகளாகச் சிதறிக்கிடக்கின்றன எனவும் இதுவரை 60 பாகங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் 24 பெரிய பாகங்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு மேலே பறந்துகொண்டிருக்கிறது எனவும் நாசா விண்வெளிமையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செயல்கள், மனிதர்கள் விண்வெளியில் எதிர்காலத்தில் பயணிப்பதற்கு உகந்ததாக இருக்காது எனவும் விண்வெளியில் மிதக்கும் பாகங்களில் பெரும்பாலானவை 10 சென்டிமீற்றருக்கும் அதிகமாக, பெரியளவில் இருப்பதனால் இவற்றினால் சர்வதேச விண்வெளிய நிலையத்துக்கு ஆபத்தான சூழல் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் இருந்து தாங்கள் செய்த ஆய்வின்படி, இந்த உடைந்த பாகங்கள் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து கடந்த வாரத்தில் இருந்து 44 சதவீதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்த அவர் எனினும் பூமியின் குறைந்த சுற்றுவட்டாரப் பாதையில் இருப்பவை அடுத்த 10 நாட்களுக்குள் சிதைந்துவிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.