நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புக் காரணமாக அல்ஜீரியாவின் ஜனாதிபதி அப்தெலாசிஸ் பவுடேபிலிகா பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டில் 4-வது முறையாக ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் அவர், 5-வது முறையாக மீண்டும் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டதனையடுத்து அவருக்கெதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
அல்ஜீரியாவில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருவதனால் மீண்டும் போட்டியிடும் திட்டத்தை திரும்ப பெற்ற அப்தெலாசிஸ், தேர்தலை ஒத்திவைத்துள்ளார். எனினும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததை தொடர்ந்து அல்ஜீரிய ராணுவ தளபதி அண்மையில்ஜினாதிபதியை சந்தித்து அரசியல் சாசனத்தின் 102-வது பிரிவை அமுல்படுத்துமாறும் உடல் நலக்குறைவு காரணமாக நாட்டில் ஜனாதிபதி பதவி வெற்றிடமாக உள்ளதாகவும் அறிவிக்குமாறும் கோரியிருந்தார். இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி பதவியில் இருந்து அப்தெலாசிஸ் பவுடேபிலிகா தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார்.
அல்ஜீரியா அரசியல் அமைப்பு படி, ஜனாதிபதி பதவி விலகினால் பாராளுமன்ற மேலவையின் சபாநாயகர் 90 நாட்கள் இடைக்கால தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது