கேரள மாநிலத்தில் உள்ள அணைகள் பராமரிப்பில் நடந்த தவறே வெள்ளப்பெருக்குக்கு காரணம் என விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பெய்த கனமழை மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த பேரிழப்புக்கு மனித தவறே காரணம் எனவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உயர்நீதிமன்றில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜேக்கப் பி.அலெக்ஸ் என்பவரை நியமித்து வெள்ளப்பெருக்குக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி ஜேக்கப் நடத்திய விசாரணையில் மாநிலத்தில் உள்ள அணைகள் பராமரிப்பில் நடந்த தவறே வெள்ளப்பெருக்குக்கு காரணம் என கண்டறியப்பட்டு உள்ளது.
கனமழை பெய்யத்தொடங்கிய ஓகஸ்ட் 14ம் திகதிக்கு முன்னரே பெரும்பாலான அணைகள் நிரம்பி இருந்ததாகவும், இதனால் கனமழை பெய்த நாட்களில் ஒரே நேரத்தில் அனைத்து அணைகளும் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் ஜேக்கப் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.