மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தகளையொட்டி நான்கு நாட்கள் தமிழகமெங்கும் மதுபானக்கடைகள் மூடப்படும் என மதுபான மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள், வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முந்தைய 48 மணி நேரத்துக்கு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தமைக்கேற்ப நேற்றையதினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும், அதோடு இணைக்கப்பட்ட பார்களும் எதிர்வரும் வரும் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ஆம் திகதியும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுபானம் உற்பத்தி, விற்பனை, விநியோகம் செய்தல் கூடாது என அண்மையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது