குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இத்தாலி நாட்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தவரின் உடலம் 25 வருடங்களின் பின்னர் யாழ்.சாவகச்சேரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
யாழ்.சாவகச்சேரி பகுதியை சேர்ந்த எம் ஸ்ரிபன் ஜோர்ச் என்பவர் இத்தாலி நாட்டிற்கு சென்று அங்கு தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 1994ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி அவருடைய 49ஆவது வயதில் உயிரிழந்திருந்தார்.
அவர் தனது இறுதி ஆசையாக தான் உயிரிழந்த பின்னர் தனது உடலத்தை தனது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு எடுத்து சென்று அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்களிடம் கோரியிருந்தார்.
அக் கால பகுதியில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடைந்திருந்தமையால் அவரது உடலத்தை இலங்கை கொண்டு வருவதில் பல சிரமங்கள் இருந்தமையால் உறவினர்கள் அவரது உடலத்தை 25 வருடங்களுக்கு பாதுகாக்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்தனர்.
அந்நிலையில் இலங்கையில் சமாதான கால பகுதி மற்றும் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் உடலத்தை இலங்கை கொண்டுவர உறவினர்கள் முயற்சித்த போதும் , 25 வருட கால ஒப்பந்தம் உள்ளமையால் , மீள பெறுவதில் சிக்கல்கள் காணப்பட்டன.
அந்நிலையில் தற்போது 25 வருடங்கள் ஆகிய நிலையில் அவரது உடலத்தை பெற்று உறவினர்கள் இலங்கை கொண்டு வந்துள்ளனர். இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது உடலம் சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது இறுதி விருப்பத்தின் படி சாவகச்சேரியில் அவரது உடலம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.