இந்தியப் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் தொமர்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பத் தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் முதலாம் திகதி மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, காங்கிரஸ் இந்துக்களை அவமதிக்கிறது எனவும் அதனால் இந்து சமூக மக்கள் காங்கிரஸைத் தேர்தலில் தண்டிக்க முடிவு செய்துள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இப்போது பெரும்பான்மையினர் இந்துக்கள் உள்ள தொகுதிகளில் போட்டியிடப் பயப்படுகிறார்கள் எனவும் அதனால்தான் சிறுபான்மையினர் உள்ள தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மோடி வெறுக்கத்தக்க மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார் என குற்றம் சுமத்தியுள்ள காங்கிரஸ் கட்சி சாதி, மதத்தைக் குறிப்பிட்டு யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்னும் தேர்தல் விதிகளை மீறி மோடி திட்டமிட்டுப் பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
மேலும் மத ரீதியாகப் பேசியது தொடர்பாகப் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்ததனைத் தொடர்ந்து இவ்வாறு விளக்கம் கேட்டு, மகாராஷ்டிரம் தேர்தல் அதிகாரிக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் அனுப்பத் தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது