ஈராக்கில் ராணுவத்தினரின் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் அயல் நாடான ஈராக்கிலும் பல்வேறு நகரங்களை தங்கள் வசமாக்கியுள்ள நிலையில் அமெரிக்க கூட்டுப்படைகளின் உதவியோடு ஈராக் ராணுவம அவர்களுக்கெதிரான போரை முன்னெடுத்து வருகின்றது.
இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பினர் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக ஈராக் அரசு அறிவித்த போதும் மீண்டும் அங்கு அவர்கள் நிலைகொண்டுள்ள நிலையில் அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நிலையில், அன்பர் மாகாணத்தின் தலைநகர் ரமாடியில் உள்ள தீவிர தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட ராணுவம் அங்கு பதுங்கி இருந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை சுட்டுக்கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்திய ஈராக் ராணுவம், சுலைமான் அகமது முகைதின் கடந்த காலங்களில் பல உயிர்களை பலிகொண்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என தெரிவித்துள்ளது.
எனினும் இந்த சம்பவம் குறித்து ஐ.எஸ். இயக்கம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது